Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி மோசடி கேரளாவை சேர்ந்த மேலும் ஒருவர் கைது

சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி மோசடி கேரளாவை சேர்ந்த மேலும் ஒருவர் கைது

சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி மோசடி கேரளாவை சேர்ந்த மேலும் ஒருவர் கைது

சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி மோசடி கேரளாவை சேர்ந்த மேலும் ஒருவர் கைது

ADDED : ஜூன் 29, 2024 10:47 PM


Google News
தாம்பரம்: சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி, பண மோசடியில் ஈடுபட்ட, கேரளா மாநிலத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, சொகுசு கார், 47 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 52. இவர், 2024, பிப்ரவரியில் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் அளித்த புகார் மனு:

என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார்.

மும்பை போலீஸ் பதிவு செய்துள்ள பணமோசடி வழக்கில், நான் பயன்படுத்தி வந்த மொபைல் போன் எண் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த நபர் கூறினார்.

இந்த எண்ணில் இருந்து மனுதாரரை, 'ஸ்கைப்' என்ற செயலி மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்வழக்கின் தொடர் விசாரணைக்காக தான் கூறும் வங்கி கணக்கிற்கு, 50 லட்சம் ரூபாயை அனுப்புமாறும் அந்த நபர் மிரட்டினார்.

இதை நம்பி, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு, 50 லட்சம் ரூபாயை அனுப்பினேன். என்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பு கொண்டவரின் தொலைபேசி எண்ணையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இப்புகார் குறித்து, தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, மார்ச் மாதம், கேரளாவை சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த முகமது ஷாஹித், 29, என்ற நபரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள், கேரளா பதிவு எண் கொண்ட சொகுசு கார், பல்வேறு வங்கிகளின், 47 ஏ.டிஎம்., கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சி.பி.ஐ., போலீஸ் போல ஆள்மாறாட்ட மோசடி, பகுதி நேர வேலை மோசடி, டெலிகிராம் டாஸ்க் கேம் தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், சைபர் உதவி எண்- 1930 அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம்.

சைபர் கிரைம் காவல் நிலையங்களையும் அணுகலாம் என, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us