Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ எஸ்.ஐ.,க்கு அரிவாள் வெட்டு: ரவுடி சுட்டு பிடிப்பு; கள்ள துப்பாக்கி அளித்த பா.ஜ., பிரமுகர் கைது

எஸ்.ஐ.,க்கு அரிவாள் வெட்டு: ரவுடி சுட்டு பிடிப்பு; கள்ள துப்பாக்கி அளித்த பா.ஜ., பிரமுகர் கைது

எஸ்.ஐ.,க்கு அரிவாள் வெட்டு: ரவுடி சுட்டு பிடிப்பு; கள்ள துப்பாக்கி அளித்த பா.ஜ., பிரமுகர் கைது

எஸ்.ஐ.,க்கு அரிவாள் வெட்டு: ரவுடி சுட்டு பிடிப்பு; கள்ள துப்பாக்கி அளித்த பா.ஜ., பிரமுகர் கைது

ADDED : ஜூன் 29, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
மாமல்லபுரம் : அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக, போலீசாரின் சந்தேக வளையத்தில் இருக்கும் சீர்காழி ரவுடி, செங்கல்பட்டு அருகே எஸ்.ஐ.,யை வெட்டி தப்ப முயன்றபோது, சுட்டு பிடிக்கப்பட்டார். ரவுடிக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கியதாக, பா.ஜ., வக்கீல் பிரிவு பிரமுகரும் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் சத்யா என்ற சீர்காழி சத்யா, 41. ரவுடியான இவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் சுதாகர், 49, என்பவரின் பிறந்த நாள் விழாவிற்காக, கூட்டாளி இருவருடன், ரவுடி சத்யா நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் வந்துள்ளார்.

பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலராக உள்ள அலெக்ஸ் சுதாகர் என்பவர், ரவுடிகள், கொலை குற்றவாளிகள் ஆகியோரை, நீதிமன்றத்தில் சரண்டர் செய்வது, அவர்களுக்கு ஜாமின் பெற்று தருவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் விடுதியில், வக்கீல் அலெக்ஸ் சுதாகர் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. வக்கீலின் நண்பர்கள், ரவுடிகள் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டனர்.

இவ்விழாவில், ரவுடி சத்யாவிற்கு பிரமாண்ட மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. விடுதியில், நள்ளிரவு பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, மது விருந்தும் அமர்க்களமாகி உள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேக பட்டியலில் இருக்கும் சத்யா, மாமல்லபுரத்திற்கு வந்துள்ளதாகவும், அவரை பிடிக்கும்படியும், செங்கல்பட்டு மாவட்ட போலீசாருக்கு, திருச்சி போலீசார் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவில், செங்கல்பட்டு தனிப்படை மற்றும் மாமல்லபுரம் போலீசார், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அதிகாலை 4:30 மணிக்கு, சென்னை நோக்கி சென்ற 'ரேஞ்ச் ரோவர்' காரை நிறுத்தினர். அந்த காரில் இருந்த ரவுடி சத்யா, தன்னிடமிருந்த துப்பாக்கியால் போலீசாரை மிரட்டினார்.

இதை பயன்படுத்தி, அவருடன் வந்த கூட்டாளிகள் இருவரும், காரில் இருந்து குதித்து தப்பி ஓடினர். ஆனால், போலீசார் சத்யாவை சுற்றி வளைத்தனர். சத்யாவை போலீசாரின் வாகனத்தில் ஏற்றி, செங்கல்பட்டு அழைத்து செல்ல முயன்றனர். திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், தனிப்படை போலீஸ் எஸ்.ஐ., ரஞ்சித் குமாரின் வலது கையில், சத்யா வெட்டினார்.

சுதாரித்த டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ், தற்காப்பு நடவடிக்கையாக சத்யாவின் இடது காலில் சுட்டார். சுருண்டு விழுந்த சத்யாவை பிடித்த போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

காயமடைந்த எஸ்.ஐ., ரஞ்சித்குமார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆறு தையல் போடப்பட்டது. சிகிச்சை முடித்து அவர் வீடு திரும்பினார்.

விசாரணையில் ரவுடி சத்யா வைத்திருந்து கள்ளத் துப்பாக்கி என்பதும், வக்கீல் அலெக்ஸ் சுதாகர் வாங்கி தந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வக்கீல் அலெக்ஸ் சுதாகரை கைது செய்த மாமல்லபுரம் போலீசார், ஐந்து தோட்டாக்களுடன் இன்னொரு கள்ளத் துப்பாக்கியையுயும் பறிமுதல் செய்தனர்.

ரவுடி சத்யாவுடன் வந்து போலீசிடம் தப்பி ஓடியவர்கள், தஞ்சாவூரைச் சேர்ந்த பால்பாண்டி, திருவாரூர் மாரிமுத்து என்பதும், செங்கல்பட்டில் பதுங்கி இருக்கலாம் என்றும் சத்யாவிடம் நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கொலையில் தொடர்பு

எஸ்.ஐ.,யை வெட்டி தப்ப முயன்றபோது சுட்டுப் பிடிக்கப்பட்ட சத்யா மீது, பல்வேறு காவல் நிலையங்களில், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. குறிப்பாக, அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், திருச்சி போலீசாரின் சந்தேகப் பட்டியலில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல விடுதிகள், பண்ணை வீடுகளில், மது விருந்துடன் கேளிக்கை கொண்டாட்டம் நடப்பது வழக்கமாக உள்ளது.பா.ஜ., பிரமுகர் வக்கீல் பிறந்த நாள் விழா நடந்த விடுதி, சில ஆண்டுகளுக்கு முன், வேறு ஒரு பெயரில் இயங்கியது. அங்கு, முன்பு நடந்த மது விருந்து, மோதல் தொடர்பாக, மாமல்லபுரம் போலீசார் பலரை கைது செய்தனர். வருவாய்த் துறையினர், விடுதிக்கு 'சீல்' வைத்தனர். அதே விடுதி, தற்போது வேறு பெயரில் இயங்கி வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us