Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மதுராந்தகம் -- மோச்சேரி சுரங்கப்பாதை அமைக்க... ரூ.22.39 கோடி!: ஓராண்டிற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டம்

மதுராந்தகம் -- மோச்சேரி சுரங்கப்பாதை அமைக்க... ரூ.22.39 கோடி!: ஓராண்டிற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டம்

மதுராந்தகம் -- மோச்சேரி சுரங்கப்பாதை அமைக்க... ரூ.22.39 கோடி!: ஓராண்டிற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டம்

மதுராந்தகம் -- மோச்சேரி சுரங்கப்பாதை அமைக்க... ரூ.22.39 கோடி!: ஓராண்டிற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டம்

ADDED : ஜூன் 28, 2024 02:20 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:மதுராந்தகம் - மோச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க,தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 22.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இப்பணிகளை விரைந்து முடித்து, ஓராண்டிற்குள் சுரங்கப் பாதை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் சென்று வரும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது.

அதை முறையாக பராமரிக்காததால், நடைமேம்பாலம் சிதிலமடைந்து பழுதடைந்தது. இதனால், பொதுமக்கள், நடைமேம்பாலத்தை பயன்படுத்துவதை தவிர்த்து, சாலையின் குறுக்கே கடந்து செல்கின்றனர்.

இந்த பகுதியில், மதுராந்தகம் அடுத்த மோச்சேரி, கருணாகரவிளாகம், அருந்ததிபாளையம், புதுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5,000த்துக்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மதுராந்தகம் மற்றும்பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், இப்பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில், 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆயிரகணக்கானோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இப்பகுதியில் விபத்தை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடையே சுரங்கப்பாதை, சிக்னல், சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தினர்.

அதன்பின், சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தை, வருவாய்த்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், காவல்துறையினர் கூட்டாக ஆய்வு செய்து, கடந்த ஆண்டு கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

தொடர்ந்து, மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவருக்கு, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் கடிதம் எழுதினார்.

அதன்பின், கடந்த அக்., 7 ம் தேதி, சுரங்கப்பாதை அமைக்க, 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது. இந்த சுரங்கப்பாதையில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்றுவரும் வகையில் அமைக்க முடிவானது.

தற்போது, சுரங்கப்பாதை அமைக்க, 22.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டது. இப்பணியை உடனடியாக துவக்கி, ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ்உத்தரவிட்டார்.

மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடையே, தேசிய நெடுஞ்சாலையில்சுரங்கப்பாதை அமைக்க, 22.39 கோடி ரூபாய் நிதியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டது.தனியார் ஒப்பந்ததாரர்கள், ஒரு மாதத்தில்கட்டுமானப் பணிகளை துவக்க உள்ளனர்.ஓராண்டிற்குள் பணிகள் அனைத்தையும் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு சுரங்கப்பாதை கொண்டு வரப்படும்.

- நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள்,

சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us