Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வணிக ரீதியான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைப்பதில் இழுபறி

வணிக ரீதியான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைப்பதில் இழுபறி

வணிக ரீதியான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைப்பதில் இழுபறி

வணிக ரீதியான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைப்பதில் இழுபறி

ADDED : அக் 14, 2025 10:51 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிக நீதிமன்றம், வணிக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., நீதிமன்றங்கள் திறப்பதில் இழுபறி நீடிக்கிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், முதன்மை மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார் ஆகிய இடங்களில், 45 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில், 32,000க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகளும், 35,000க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலப்பிரச்னை மற்றும் வணிக ரீதியான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சென்னை புறநகரில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களின் வழக்குகளை விரைந்து முடிக்க, செங்கல்பட்டில் வணிக நீதிமன்றம் மற்றும் வணிக மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசிடம் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இதுகுறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதன்படி, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வணிக நீதிமன்றம், வணிக மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைக்க, தமிழக அரசு 2020 நவ., 9ம் தேதி உத்தரவிட்டது.

இதே ஆண்டு, எஸ்.சி.எஸ்.டி., நீதிமன்றம் திறக்கவும், அரசு உத்தரவிட்டது. வணிக நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி மற்றும் ஊழியர்கள் என 18 பேர், வணிக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதி மற்றும் ஊழியர்கள் 14 பேர் என நியமிக்க முடிவானது.

அதன் பின், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தில், மேற்கண்ட நீதிமன்றங்களை துவக்க, நீதித்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் முடிவு செய்தனர்.

இதில், பழைய கட்டடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளவும், புதிதாக முதல் தளம் கட்டடம் கட்டவும், 2.37 கோடி ரூபாயை, தமிழக அரசு 2023ம் ஆண்டு ஒதுக்கி உத்தரவிட்டது.

இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாக பணிகள் துவக்கப்பட்டன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அனைத்து பணிகளும் முடிந்து, புனரமைக்கப்பட்ட கட்டடம் மற்றும் புதி ய கட்டடங்களை நீதித்துறையிடம் பொதுப்பணித் துறையினர் ஒப்படைத்தனர்.

ஆனாலும் வணிக நீதிமன்றம், வணிக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., நீதிமன்றங்கள் திறப்பதில், இழுபறி நீடித்து வருகிறது. எனவே, மேற்கண்ட நீதிமன்றங்களை விரைவில் திறந்து வழக்குகளை முடிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நடவடிக்கை தேவை

இதுகுறித்து, வழக்கறிஞர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வணிக நீதிமன்றம், வணிக மேல்முறையீட்டு நீதிமன்றம், எஸ்.சி., - எஸ்.டி., நீதிமன்றங்கள் புதிதாக திறக்கப்பட உள்ளன. பழைய கட்டடங்கள் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், முதல் தளம் புதிய கட்டடம் கட்டும் பணிகளும் முடிந்துள்ளன. கட்டடங்கள் தயாரான நிலையில், இந்த நீதிமன்றங்களை திறக்க, முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us