Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஜி.எஸ்.டி., சாலையில் நடைமேடை அபகரிப்பு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

ஜி.எஸ்.டி., சாலையில் நடைமேடை அபகரிப்பு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

ஜி.எஸ்.டி., சாலையில் நடைமேடை அபகரிப்பு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

ஜி.எஸ்.டி., சாலையில் நடைமேடை அபகரிப்பு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி

ADDED : மார் 16, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், அமைக்கப்பட்டுள்ள அணுகுசாலை மற்றும் நடைபாதை யாவும், முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் நுழைவு வாயிலாகவும், முக்கிய வழித்தடமாகவும் உள்ள ஜி.எஸ்.டி., சாலை எனப்படும் மாபெரும் தெற்கு வழித்தடம், தேசிய நெடுஞ்சாலை 45ல் ஒரு பகுதியாக உள்ளது.

சென்னை கத்திப்பாரா சந்திப்பில் துவங்கும் இந்த ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், தேனி வரை 496 கி.மீ., நீளம் உள்ளது.

இதில், செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான 28 கி.மீ., நீளமுள்ள சாலையில், தினமும் லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால், சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.

எனவே, வாகன விபத்துகளை தவிர்க்க, பிரதான சாலையோரம் அணுகுசாலை, நடைமேடை 70 சதவீத இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அணுகுசாலை மற்றும் நடைமேடை வழித்தடம் முழுதையும், சாலையோர கடைக்காரர்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்து, தங்களுக்கான வியாபார இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், அணுகு சாலையைப் பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகளும், நடைமேடையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

தவிர, ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக செல்ல முடியாத நிலையும் உருவாகி உள்ளது. இதனால் விபத்துகளும் தாராளமாகி வருகின்றன. எனவே, பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில், நடைமேடைகளை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் கூறியதாவது:

'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், ஜி.எஸ்.டி., சாலையின் இரு வழித்தடத்திலும் போக்குவரத்து அதிகம் இருக்கும். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டேங்கர், டிப்பர், டாரஸ் உள்ளிட்ட அதிகனரக வாகனங்கள் இந்த சாலையில் பயணிப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அணுகுசாலையில் பயணிப்பதே பாதுகாப்பை தரும்.

ஆனால், சாலையோரம் உள்ள கடைக்காரர்கள், அணுகு சாலை முழுதையும், தங்களுக்கான இடமாக பயன்படுத்தி வருவதால், பிரதான சாலையில்தான் இருசக்கர வாகனங்களையும் இயக்க வேண்டி உள்ளது. ஒவ்வொரு நொடியும் விபத்து அச்சத்தில்தான் பயணிக்க வேண்டி உள்ளது.

பேருந்து பயணியர் கூறியதாவது:

ஊரப்பாக்கம் முதல் கூடுவாஞ்சேரி வரை, பாதசாரிகள் பயன்படுத்த முடியாத வகையில், அனைத்து நடைமேடைகளும், கடைக்காரர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது. தவிர, கடைகளுக்கு முன்பாக உள்ள அணுகுசாலை, வாகன பார்க்கிங் இடமாக பயன்படுத்தப்படுகிறது.

இதனால், பிரதான சாலையில் நடந்து சென்றே, பேருந்து நிறுத்தத்தை அடைய வேண்டி உள்ளது. அப்படிச் செல்லும்போது, வாகன ஓட்டிகள் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி, திட்டியபடி செல்கின்றனர். இது மன உளைச்சலைத் தருகிறது.

தவிர, சாலையோரம் நடந்து செல்வோர் மீது வாகனங்கள் மோதி உயிரிழப்பும் அவ்வப்போது நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us