/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கலெக்டர் ஆபீசில் தற்கொலை சம்பவங்கள் புறக்காவல் நிலையம் அமைப்பது அவசியம்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் கலெக்டர் ஆபீசில் தற்கொலை சம்பவங்கள் புறக்காவல் நிலையம் அமைப்பது அவசியம்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கலெக்டர் ஆபீசில் தற்கொலை சம்பவங்கள் புறக்காவல் நிலையம் அமைப்பது அவசியம்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கலெக்டர் ஆபீசில் தற்கொலை சம்பவங்கள் புறக்காவல் நிலையம் அமைப்பது அவசியம்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கலெக்டர் ஆபீசில் தற்கொலை சம்பவங்கள் புறக்காவல் நிலையம் அமைப்பது அவசியம்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2025 03:05 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனுக்கள் அளிக்க வருவோரில் சிலர், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இந்த தாலுகாக்களுக்கு உட்பட்ட மக்கள் தங்கள் நில பிரச்னை தொடர்பாக தீர்வு காண, அந்தந்த தாலுகா அலுவலகங்களில் மனுக்கள் அளிக்கின்றனர்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் கிடப்பில் போட்டு விடுகின்றனர்.
இதே பிரச்னைகளுக்கு தீர்வு காண, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கின்றனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, சப் - கலெக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோருக்கு, கலெக்டர் உத்தரவிடுகிறார்.
அதன் பின், மனுக்கள் மீதான விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக, பாதிக்கப்பட்டோர் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன், கலெக்டர் அலுவலகம் வந்து, தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர்.
அந்த வகையில், பல்லாவரம் தாலுகாவில், நில பிரச்னைக்கு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, மாற்றுத்திறனாளி ஒருவர், கடந்த ஏழு மாதங்களுக்கு முன், கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார்.
அப்போது, அவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் நுழைவாயில் பகுதியில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஒரு சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் இரண்டு போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையையும் மீறி, சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சரவணபிரகாஷ், 40, என்பவர், சமீபத்தில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து காப்பாற்றினர். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை, மக்கள் நலன்காக்கும் கூட்டம் மற்றும் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நடக்கிறது.
இதுமட்டுமின்றி தினமும், பல்வேறு தேவைக்காக கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களை பொதுமக்கள் சந்தித்து, மனுக்கள் அளித்து வருகின்றனர்.
மனுக்கள் மீது தீர்வு காணவில்லை எனக் கூறி இதுவரை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நான்கு பேர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ஒருவர் இறந்து விட்டார். இதுபோன்ற சம்பவங்களால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதனால், பாதுகாப்பு கருதி, போலீசார் இங்கு புறக்காவல் நிலையம் அமைத்து, ஒரு சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட, மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.