/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : பிப் 01, 2024 10:43 PM

மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், ராமர், 12 ஆழ்வார்கள், கருடர், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமியர் அருள்பாலிக்கின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. மீண்டும் நடத்த, துறை நிர்வாகம் முடிவெடுத்தது.
சென்னை, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த உபயதாரர் குமார், 3.51 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொண்டார். இரண்டு ஆண்டுகளாக நடந்த பணிகள் முடிக்கப்பட்டன.
ஜன., 30ம் தேதி, நைமித்திக ஆராதனை, அனுக்ஞை, புண்யாகவசனம், வாஸ்து ஹோமம், முதல்கால யாகசாலை உள்ளிட்ட வழிபாட்டு பூஜைகள் துவக்கப்பட்டு, நேற்று நிறைவடைந்தன.
நேற்று காலை, நான்காம் கால பூஜை நிறைவைத் தொடர்ந்து, மூலவர், தாயார் சன்னிதிகளின் விமானங்கள், கொடிமரம், ராஜகோபுரம் ஆகியவற்றை கும்பங்கள் அடைந்து, காலை 8:25 மணிக்கு, புனித நீரூற்றி மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உபயதாரர் குமார், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஆதிகேசவலு, கலெக்டர் அருண்ராஜ், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர். ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்களிடம், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
இன்று மட்டுமே, ஸ்தலசயன பெருமாள் கோவில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் உள்ளிட்ட, 13 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
கடந்த இரண்டே ஆண்டுகளில், 1,339 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் 8,186 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 18,788 கோவில்களில் பணிகளுக்கு அனுமதித்து, 4,157.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருத்தணி, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட கோவில்களுக்கு 'ரோப் கார்', மருதமலை உள்ளிட்ட கோவில்களுக்கு 'லிப்ட்' வசதி ஏற்படுத்தப்படும்.
எப்போதுமே இல்லாத அளவிற்கு, உபயதாரர்கள் மூலமே, 1,225 கோடி ரூபாய் மதிப்பில் 7,655 பணிகள் நடக்கின்றன. 37 குளங்கள் 18 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டன.
அதோடு, 2023 - 24ல், 45 திருக்குளங்கள் மேம்பாட்டிற்கு, 25.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த, 5,572 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.


