Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பூங்காக்கள் பராமரிப்பில் நகராட்சி நிர்வாகம்...அலட்சியம்:விளையாட முடியாமல் குழந்தைகள் ஏமாற்றம

பூங்காக்கள் பராமரிப்பில் நகராட்சி நிர்வாகம்...அலட்சியம்:விளையாட முடியாமல் குழந்தைகள் ஏமாற்றம

பூங்காக்கள் பராமரிப்பில் நகராட்சி நிர்வாகம்...அலட்சியம்:விளையாட முடியாமல் குழந்தைகள் ஏமாற்றம

பூங்காக்கள் பராமரிப்பில் நகராட்சி நிர்வாகம்...அலட்சியம்:விளையாட முடியாமல் குழந்தைகள் ஏமாற்றம

ADDED : மே 14, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சியில் பூங்காக்களை முறையாக பராமரிக்காததால், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பல பூங்காக்கள், மக்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகின்றன. இந்த பூங்காக்களை பராமரிக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டு, தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த நகராட்சி 16 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, 21 வார்டு பகுதிகளை கொண்டு உள்ளது.

இதன் மொத்த பரப்பளவு 58.08 சதுர கிலோ மீட்டர். இங்கு 30,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 500க்கும் மேற்பட்ட வணிக கட்டங்கள் உள்ளன.

மறைமலைநகர் சிப்காட் பகுதியில், 270க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வந்து, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு தினமும் மறைமலைநகர் வந்து செல்கின்றனர்.

மறைமலைநகர் 21 வார்டுகளில், 371 இடங்கள் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் நகராட்சி சார்பில், 117 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

சிமென்ட் கற்கள் கொண்ட நடைபாதைகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை இப்பூங்காக்களில் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த பூங்காக்கள் அனைத்தையும் பராமரிக்கும் பணிகள், சில தனியார் நிறுவனங்களுக்கு 'டெண்டர்' விடப்பட்டன.

தற்போது இந்த டெண்டர் முடிந்து, 10 மாதங்கள் ஆன நிலையில், பல பூங்காக்கள் பயன்பாடு இல்லாமல், வீணாகி வருகின்றன.

நகராட்சி நிர்வாகம் இவற்றை முறையாக பராமரிக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மறைமலைநகர் பகுதிவாசிகள் கூறியதாவது:

மறைமலை நகர் நகராட்சியில் வார்டுக்கு தலா மூன்று முதல் நான்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பூங்காக்கள் பலவற்றில் மின் விளக்குகள், விளையாட்டு உபகரணங்கள், சுற்றுச்சுவர்கள் சேதமடைந்து உள்ளன.

திருக்கச்சூர், காட்டாங்கொளத்துார், பேரமனுார் கிழக்கு பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள் பாழடைந்து, விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து காணப்படுகின்றன.

மொத்தம் 42 பூங்காக்கள், எந்தவித பராமரிப்புமின்றி காணப்படுகின்றன.

இதன் காரணமாக, இரவு நேரங்களில் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்லும் மர்ம நபர்கள், மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூங்கா முறையாக இல்லாததால், குழந்தைகள் தெருக்களில் விளையாடும் நிலை ஏற்பட்டுஉள்ளது.

அல்லது எட்டாவது வார்டில் உள்ள நகராட்சி மைதானம் மற்றும் அதன் அருகில் உள்ள பூங்காவிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஒரே நேரத்தில் நகரில் பல பகுதிகளில் இருந்து குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என வருவதால், மாலை நேரங்களில் மைதானம் நெரிசலாக மாறுகிறது.

எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள பூங்காக்களை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பள்ளி குழந்தைகளுக்கு தற்போது கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில், பூங்காக்கள் பராமரிப்பு இல்லாததால் அவர்கள் விளையாட இடமின்றி, ஏமாற்றம் அடைந்து உள்ளனர். குழந்தைகள் தீய பழக்கங்களுக்கு திசை மாறும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. எனவே, நகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளிலும் உள்ள பூங்காக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ப.மணிகண்டன், மறைமலை நகர்

நிதி வீணடிப்பு


மறைமலை நகர், 20வது வார்டு ஸ்ரீ வாரி நகரில், 2022ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. மின் விளக்குகள், விளையாட்டு உபகரணங்கள், கண்காணிப்பு கேமராக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியுடன், கலைஞர் பெயர் கொண்டு பூங்கா அமைக்கப்பட்டது.இதே பகுதியில் 500 மீட்டர் தொலைவில், அண்ணா பூங்கா அமைந்துள்ளது. போதிய அளவு குடியிருப்புகள் இல்லாத பகுதியில், பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு பூங்கா அமைத்து, நிதி வீணடிக்கப்பட்டு உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us