Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பல்லாவரம் புத்தேரி சீரமைப்பு திட்டம் ரூ.8.15 கோடியில் பணிகள் துவக்கம்

பல்லாவரம் புத்தேரி சீரமைப்பு திட்டம் ரூ.8.15 கோடியில் பணிகள் துவக்கம்

பல்லாவரம் புத்தேரி சீரமைப்பு திட்டம் ரூ.8.15 கோடியில் பணிகள் துவக்கம்

பல்லாவரம் புத்தேரி சீரமைப்பு திட்டம் ரூ.8.15 கோடியில் பணிகள் துவக்கம்

ADDED : அக் 07, 2025 11:31 PM


Google News
பல்லாவரம்:கழிவுநீர் தேக்கமாக மாறி நாசமடைந்துவிட்ட பல்லாவரம் புத்தேரியை, 8.15 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரத்தில் புத்தேரி உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் பரப்பளவு 7 ஏக்கர்.

பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை அமைக்கப்பட்ட போது, இந்த ஏரி, வடக்கு - தெற்கு என இரண்டு பகுதிகளாக பிரிந்தது. அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால், செடிகள் சூழ்ந்து, ஏரி இருப்பதே தெரியாமல் இருந்தது.

இதை பயன்படுத்தி, பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எஞ்சியுள்ள ஏரியை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், தெற்கு பகுதியில் உள்ள ஏரி, 30 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. அப்போது, துார்வாரி, ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தி நடைபாதை அமைக்கப்பட்டது.

வடக்கு பகுதியில் உள்ள ஏரியை, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, 2018ம் ஆண்டு பொதுமக்கள் பங்களிப்புடன் துார்வாரி ஆழப்படுத்தியது. அதன் பின்னும், இந்த ஏரியை பராமரிக்க மாநகராட்சி அக்கறை காட்டவில்லை.

இதனால், கழிவுநீர் கலந்து நாசமாகி விட்டது. தெற்கு பகுதி ஏரியில் கழிவுநீர் கலந்து, ஆண்டு முழுதும் நுரையுடன் கூடிய உபரி நீர் வெளியேறி வருகிறது.

வடக்கு பகுதி ஏரி செடிகள் சூழ்ந்து கழிவுநீர் குட்டையாகவே மாறிவிட்டது. இந்த ஏரியில், கடந்த 2020ம் ஆண்டு, மர்ம கும்பல், 30 லோடுக்கும் அதிகமாக குப்பையை கொட்டியது.

அப்போது, இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, ஏரியில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்பட்டது. தொடர்ந்து நாசமாகிவரும் இந்த ஏரியை துார்வாரி, ஆழப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியிடம், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர், இது தொடர்பாக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, இந்த ஏரியை சீரமைக்க, சி.எம்.டி.ஏ., நிதியாக, 8.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, சீரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆகியோர் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தனர். பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, கமிஷனர் பாலசந்தர் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின்படி ஏரியை துார்வாரி ஆழப்படுத்தி கரையை பலப்படுத்துதல், நடைபாதை, சிறுவர் பூங்கா, பசுமை புல்வெளி, உடற்பயிற்சி கூடம், சுற்றுச்சுவர், கழிப்பறை, இருக்கை, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us