/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/புறநகரில் இருசக்கர வாகன திருட்டு அதிகரிப்பு வழக்கு பதிவு செய்வதில் போலீசார் அலட்சியம்புறநகரில் இருசக்கர வாகன திருட்டு அதிகரிப்பு வழக்கு பதிவு செய்வதில் போலீசார் அலட்சியம்
புறநகரில் இருசக்கர வாகன திருட்டு அதிகரிப்பு வழக்கு பதிவு செய்வதில் போலீசார் அலட்சியம்
புறநகரில் இருசக்கர வாகன திருட்டு அதிகரிப்பு வழக்கு பதிவு செய்வதில் போலீசார் அலட்சியம்
புறநகரில் இருசக்கர வாகன திருட்டு அதிகரிப்பு வழக்கு பதிவு செய்வதில் போலீசார் அலட்சியம்
ADDED : பிப் 10, 2024 10:31 PM
செங்கை புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, வண்டலுார், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில், நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் திருடு போவது அதிகரித்து வருகிறது.
மறைமலை நகர் சிப்காட், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மறைமலை நகரை சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், தென்மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள், தங்களின் குடியிருப்புகள் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும்போது, அவை திருடப்படுவது தொடர்கதையாக உள்ளது.
அதேபோல, செங்கல்பட்டு ரயில் நிலைய பார்க்கிங், அரசு மருத்துவமனை பார்க்கிங் பகுதிகளில், அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுகின்றன.
திருடப்படும் இருசக்கர வாகனங்கள், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் சுற்றியுள்ள காப்புக்காடுகளில் பதுக்கி வைத்து, அதில் உள்ள பாகங்களை பிரித்து விற்பனை செய்வதாக பரவலாக பேசப்படுகிறது.
இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்து, செங்கல்பட்டு, மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உட்பட பல காவல் நிலையங்களில், பாதிக்கப்பட்டோரின் புகாரை வாங்குவதில்லை என்றும், முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல நாட்கள் காவல் நிலையம் அலைந்த பின்னரே, வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
திருடப்பட்ட வாகனங்களை சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களுக்கு பயன்படுத்தி, வாகனம் பிடிபட்டால் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, இருசக்கர வாகனங்கள் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி நடக்கும் திருட்டு சம்பவங்களுக்கு, முறையாக வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புறநகர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- -நமது நிருபர் ---