/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிளை நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை கிளை நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை
கிளை நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை
கிளை நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை
கிளை நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை
ADDED : செப் 23, 2025 10:53 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பழைய கிளை நுாலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சந்தைமேட்டுத் தெருவில், கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 1996ல் கட்டப்பட்ட இந்த நுாலகத்தில் சிறுகதைகள், இலக்கியங்கள், வரலாற்று புத்தகங்கள் என, 40,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர், இல்லத்தரசிகள் என, 2,500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நுாலக கட்டடம் சாலையை விட 3 அடி தாழ்வாக உள்ளதால், மழைக்காலத்தில் நுாலகத்தில் தண்ணீர் தேங்குகிறது.
கட்டடம் கட்டப்பட்டு 29 ஆண்டுகள் ஆனதால், சுவர் மற்றும் மேல் தளத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
மேலும், ஜன்னல் மற்றும் மின் இணைப்பு பழுதடைந்து உள்ளதுடன், நுாலக வளாகம் அருகே குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, நுாலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட வேண்டுமென, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாசகர்கள் கூறியதாவது:
தற்போதுள்ள நுாலக கட்டடம், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டடம் பாழடைந்து உள்ளதால், போட்டித் தேர்வுகளுக்கு குறிப்பு எடுக்க வருவோர் அமர்ந்து படிக்க அச்சப்படுகின்றனர்.
எனவே, பழைய நுாலக கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.