Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையம் நிதி சிக்கலால் திறப்பதில் தாமதம்

சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையம் நிதி சிக்கலால் திறப்பதில் தாமதம்

சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையம் நிதி சிக்கலால் திறப்பதில் தாமதம்

சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையம் நிதி சிக்கலால் திறப்பதில் தாமதம்

ADDED : அக் 14, 2025 12:33 AM


Google News
சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இங்கு, 20,000க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக கட்டடங்கள் உள்ளன. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, தினமும் சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

ஒரகடம், மகேந்திரா சிட்டி, மறைமலைநகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வருவோர் இங்கு வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

இந்த பகுதி மக்கள் குற்றம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு, 7 கி.மீ., தொலைவில் உள்ள மறைமலைநகர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கும் நிலை உள்ளது.

எனவே, மறைமலைநகர் காவல் நிலையத்தை பிரித்து, இந்த பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து 2023ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, புதிய காவல் நிலையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் அறிவித்தார்.

இந்த உத்தரவு வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு மற்றும் எல்லைகள் பிரிப்பது தொடர்பாக தாமதம் ஏற்பட்டு வந்தது.

திருக்கச்சூர் சாலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள், போலீசார் தரப்பில் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டன.

வருவாய் துறை அதிகாரிகள், திருக்கச்சூர் சாலையில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தை தேர்வு செய்துள்ளனர். கடந்த மாதம் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்த நாளன்று, புதிய காவல் நிலையம் திறக்கப்படுவதாக இருந்தது.

இன்ஸ்பெக்டர் உட்பட 10 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆனாலும், காவல் நிலையம் செயல்பட மேஜை, நாற்காலிகள், பீரோ, அதிகாரிகளுக்கான 'கேபின்' உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தாமதம் காரணமாக, இதுவரை காவல் நிலையம் திறக்கப்படவில்லை.

மேலும், இதற்கு அரசு சார்பில் நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் சி.எஸ்.ஆர்., நிதி பெற்று, காவல் நிலையத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி, காவல் நிலையத்தை திறப்பதற்கான பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us