/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மேம்பாலம், சாலையோரத்தில் இடையூறாக பேனர்கள் தீராத பிரச்னை:சுவர் விளம்பரங்களாலும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் மேம்பாலம், சாலையோரத்தில் இடையூறாக பேனர்கள் தீராத பிரச்னை:சுவர் விளம்பரங்களாலும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
மேம்பாலம், சாலையோரத்தில் இடையூறாக பேனர்கள் தீராத பிரச்னை:சுவர் விளம்பரங்களாலும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
மேம்பாலம், சாலையோரத்தில் இடையூறாக பேனர்கள் தீராத பிரச்னை:சுவர் விளம்பரங்களாலும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
மேம்பாலம், சாலையோரத்தில் இடையூறாக பேனர்கள் தீராத பிரச்னை:சுவர் விளம்பரங்களாலும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : செப் 24, 2025 10:54 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் மேம்பாலங்களில் வரையப்படும் சுவர் விளம்பரங்கள், சாலையோரங்களில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வைக்கப்படும் விளம்பர பேனர்களை அகற்ற, மாவட்டம் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் செங்கல்பட்டு, பரனுார், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன.
சென்னை நுழைவு பகுதியில் இந்த மேம்பாலங்கள் உள்ளதால், அதிகளவில் வாகன ஓட்டிகள் வந்து செல்லும் இந்த பாலங்களில், போட்டி போட்டுக் கொண்டு அனைத்து கட்சியினரும் சுவர் விளம்பரங்கள் வரைவது, பேனர்கள் வைப்பது என, தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தமிழரின் வரலாற்று ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன. சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் சுவர் விளம்பரம் வரையப்பட்டு, அந்த ஓவியங்கள் அழிக்கப்பட்டன.
தற்போது, அதில் அ.தி.மு.க., போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள.
திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., உள்ளிட்ட முக்கிய சாலைகளில் விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன.
திருப்போரூர்- - திருக்கழுக்குன்றம் சாலையில், ஆமையாம்பட்டு பகுதியில் உள்ள உயர்மட்ட பாலம், திருப்போரூர் - நெம்மேலி சாலையில் பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே உள்ள மேம்பாலம், படூர் - தையூர் ஆறுவழிச் சாலையில் கேளம்பாக்த்தில் உள்ள மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில், அரசியல் கட்சி விளம்பரங்கள் வரையப்பட்டு உள்ளன.
இதுமட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் இருபுறமும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு பேனர்கள் வைக்கின்றனர்.
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சென்னை தாம்பரம் - அச்சிறுபாக்கம் அடுத்து ஆத்துார் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் அரசியல் கட்சியினர் கட்சி மாநாடு, தலைவர்கள் பிறந்த நாள் உள்ளிட்ட விளம்பரங்களை சுவர் விளம்பரமாக எழுதுகின்றனர்.
இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான அனைத்து பாலங்களிலும் சுவர் விளம்பரங்கள் எழுதுகின்றனர்.
இதுபோன்ற விளம்பரங்களைப் பார்க்கும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த விபத்துகளை தவிர்க்க, சாலைகளில் பேனர்கள் மற்றும் மேம்பாலங்களின் சுவரில் விளம்பரங்கள் எழுத, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த தடையை மீறி, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் பேனர்கள் வைத்து வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அலட்சியமாக உள்ளனர்.
செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் ரயில்வே மேம்பாலம் பகுதியில், அடிக்கடி சாலை விபத்துகள் நடந்தன. இதனால், மேம்பாலம் அருகில் ரவுண்டானா அமைத்து, தடுப்புகள் அமைத்தனர்.
விபத்து நடைபெறும் இந்த இடத்தில், அரசியல் கட்சி விளம்பர பதாகைகள், மற்றும் வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பதாகைகள், நகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி வைக்கப்பட்டு வருகின்றன.
இதை அகற்ற வேண்டிய நகராட்சி நிர்வாகம், கண்டுகொள்ளாமல் உள்ளது. பெரிய விபத்துகள் நடக்கும் போது மட்டும் தான், அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய மேம்பாலங்களின் சுவர் மற்றும் சாலையோரங்களில் விளம்பர பலகைகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.