Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மழையில் வீணாகும் டூ - வீலர்கள்

கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மழையில் வீணாகும் டூ - வீலர்கள்

கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மழையில் வீணாகும் டூ - வீலர்கள்

கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மழையில் வீணாகும் டூ - வீலர்கள்

ADDED : செப் 26, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், மழையில் நனைந்து, துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ், கூடுவாஞ்சேரி காவல் நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு, பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

வாகனங்களை செடிகள் மூடியுள்ளதுடன், வெயில் மற்றும் மழையில் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

இதனால், வழக்குகள் முடிந்த பிறகும், உரிமையாளர்களில் பலர் இந்த வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ள முன்வருவதில்லை.

அவ்வாறு உரிமையாளர்களால் கைவிடப்பட்ட, உரிமை கோரப்படாத வாகனங்கள், காவல் துறை சார்பில் ஏலம் விடப்படுகின்றன. இதன் மூலமாக, அரசுக்கு நல்ல வருவாயும் கிடைக்கிறது.

ஆனால், மழையில் நனைந்து துருப்பிடித்து, இயங்க முடியாத நிலைக்கு இந்த வாகனங்கள் மாறுவதால், ஏலத்தின் போது, 90 சதவீத வாகனங்களை எவரும் வாங்க முன்வருவதில்லை.

இதனால், அரசுக்கு வரவேண்டிய வருவாயில் பெரும் இழப்பு ஏற்படுகிறது.

வருவாய் இழப்பு


சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளாக, வெட்ட வெளியில் மழையில் நனைந்து துருப்பிடித்து, வாகனங்கள் வீணாகி வருகின்றன. இந்த நிலையிலுள்ள வாகனங்களை யாரும் வாங்க முன்வருவது இல்லை. இதனால், 50,000 ரூபாய் மதிப்புள்ள வாகனம், 5,000 ரூபாய்க்கு கூட ஏலம் போவதில்லை. எனவே, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த, கூரையுடன் கூடிய கொட்டகை அமைக்க வேண்டும்.
இப்படி செய்வதால் வெயில், மழையால் வாகனங்கள் பாதிக்கப்படாமல், உறுதித் தன்மையுடன் இருக்கும். இதனால், உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடும் போது, நல்ல விலை கிடைக்கும். அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும். எனவே, குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்த பின், அவற்றை உரிய முறையில் பாதுகாக்க, காவலர் வீட்டு வசதி வாரியம் மூலமாக, கூரையுடன் கூடிய கொட்டகை அமைக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த நடைமுறையை செயல்படுத்த, தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us