/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சாலை அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை வளையகரணை கிராமவாசிகள் அவதிசாலை அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை வளையகரணை கிராமவாசிகள் அவதி
சாலை அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை வளையகரணை கிராமவாசிகள் அவதி
சாலை அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை வளையகரணை கிராமவாசிகள் அவதி
சாலை அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை வளையகரணை கிராமவாசிகள் அவதி
ADDED : ஜன 27, 2024 12:21 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில், ஆப்பூர் -- வளையகரணை இடையே 3. கி.மீ., துார சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, வளையகரணை கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர்.
இந்த சாலை, பல ஆண்டுகளாக சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை முழுதும் புதர் மண்டி காணப்படுகிறது.
இதன் காரணமாக, இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இருபுறமும் வனப்பகுதி என்பதால், முள்செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளன.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்வதை தவிர்த்து, 2 கி.மீ., துாரம் சுற்றிச் செல்கின்றனர்.
இது குறித்து, வளையகரணை கிராமவாசிகள் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த சாலை சரி செய்யப்படாமல் உள்ளது. கோடை காலங்களில், அருகில் உள்ள ஏரியில் தண்ணீர் இருக்காது.
அப்போது, அங்கு உருவாகும் தற்காலிக பாதைகளில் சென்று வருவோம். மற்ற நேரங்களில், 2 கி.மீ., சுற்றி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சாலை வழியாக சென்று வருகிறோம்.
சாலையின் இருபுறமும் வனப்பகுதி என்பதால், வனத்துறையினர் புதிய சாலை அமைப்பதற்கு அனுமதி அளிக்காமல் முட்டுக்கட்டையாக உள்ளனர்.
மேலும், இந்த சாலையில் பெரும்பாலான பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. ஆனால், இந்த சாலையை பயன்படுத்தும் வளையகரணை காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ளது.
அதனால், இரு மாவட்ட அரசு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால், அவசர காலங்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
அடிக்கடி வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. எனவே, இரு மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு, வனத்துறை அனுமதி பெற்று, இந்த சாலையை புதிதாக அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


