/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/துரைப்பாக்கம், சோழிங்கநல்லுாரில் மூடு கால்வாய் பணிகள் நிறுத்தம் அடுத்த பருவமழைக்கு முன் முடிக்கப்படுமா?துரைப்பாக்கம், சோழிங்கநல்லுாரில் மூடு கால்வாய் பணிகள் நிறுத்தம் அடுத்த பருவமழைக்கு முன் முடிக்கப்படுமா?
துரைப்பாக்கம், சோழிங்கநல்லுாரில் மூடு கால்வாய் பணிகள் நிறுத்தம் அடுத்த பருவமழைக்கு முன் முடிக்கப்படுமா?
துரைப்பாக்கம், சோழிங்கநல்லுாரில் மூடு கால்வாய் பணிகள் நிறுத்தம் அடுத்த பருவமழைக்கு முன் முடிக்கப்படுமா?
துரைப்பாக்கம், சோழிங்கநல்லுாரில் மூடு கால்வாய் பணிகள் நிறுத்தம் அடுத்த பருவமழைக்கு முன் முடிக்கப்படுமா?
ADDED : ஜன 28, 2024 04:18 AM

துரைப்பாக்கம்: சேலையூர், காரணை, ஒட்டியம்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் சேர்கிறது.
இந்த நீர், பகிங்ஹாம் கால்வாய்க்கு நேராக செல்வதில்லை. மாறாக, பெரும்பாக்கம், துரைப்பாக்கம் வழியாக, தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி, 8 கி.மீ., பயணித்து, மீண்டும் தெற்கு நோக்கி பகிங்ஹாம் கால்வாய் வழியாக செல்கிறது.
இதனால், நீரோட்டம் குறைந்து ஆங்காங்கே தேங்குவதால், குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோல், பெரும்பாக்கம் வழியாக வரும் மழைநீர், துரைப்பாக்கம் செல்லாமல், சோழிங்கநல்லுாரில் இருந்து நேராக பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், 47 கோடி ரூபாயில், மற்றொரு மூடுகால்வாய் கட்டப்படுகிறது.
இந்த மூடு கால்வாய், எல்காட் சந்திப்பில் இருந்து, பகிங்ஹாம் கால்வாய் வரை, 1.7 கி.மீ., நீளம், 10 அடி அகலம், 8 அடி ஆழத்தில், சாலையின் இரு பகுதிகளிலும் அமைகிறது.
சாலையின் மையப்பகுதியில் கட்டுவதால், மேல்பகுதி 'சிலாப்' ஒன்றேகால் அடி கனத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பணி, துவங்கும் மற்றும் முடியும் இடங்களில், 600 மீட்டர் துாரம் மட்டுமே முடிவடைந்துள்ளது.
சோழிங்கநல்லுார் சந்திப்பில், மெட்ரோ ரயில் நிலையம் கட்டும் பணி நடப்பதால், மைய மூடு கால்வாய் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட உள்ளது. நேராக செல்ல வேண்டி கால்வாய், ஓ.எம்.ஆரில் 'ப' வடிவில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடியும் மழைநீர், ரேடியல் சாலை வழியாக, பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், 70 கோடி ரூபாயில், மூடு கால்வாய் கட்டப்படுகிறது.
நேராக செல்ல வேண்டிய இந்த கால்வாயும், துரைப்பாக்கம் சிக்னலில் 'எல்' வடிவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இரண்டு மூடு கால்வாய் வடிவமைப்பில் மாற்றம் செய்ய, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் மத்தியில் பேச்சு நடக்கிறது. இதனால், இரண்டு மூடு கால்வாய் பணியும் நிறுத்தப்பட்டு உள்ளது.
பணி துவங்கிய வேகத்தில் முடிந்திருந்தால், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதியில் வெள்ள பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கும்.
அடுத்த பருவமழைக்கு முன், இரண்டு மூடு கால்வாய் பணியை முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.