/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குரோம்பேட்டையில் 6 மின்மாற்றிகள் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம் குரோம்பேட்டையில் 6 மின்மாற்றிகள் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம்
குரோம்பேட்டையில் 6 மின்மாற்றிகள் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம்
குரோம்பேட்டையில் 6 மின்மாற்றிகள் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம்
குரோம்பேட்டையில் 6 மின்மாற்றிகள் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி போராட்டம்
ADDED : ஜூலை 25, 2024 01:07 AM

குரோம்பேட்டை, பல்லாவரம் மின் கோட்டம், குரோம்பேட்டை நியூ காலனியில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
குரோம்பேட்டையில் ஏழு இடங்களில் அமைக்கப்பட்ட மின்மாற்றிகளில் ஆறு மாயமாகி விட்டதாகவும், உரிய விசாரணை நடத்தி அதை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் சிலர், சாந்தி நகர் உதவி செயற்பொறியாளரிடம் நேற்று புகார் மனு அளித்தனர். மின் வாரியத்தில் முற்றுகை போராட்டமும் நடத்தினர்.
குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தானம், 86, கூறியதாவது:
நியூ காலனி பிரிவுக்கு உட்பட்ட நியூ காலனி ஏரிக்கரை தெரு, 4வது பிரதான சாலை, ஹவுசிங் போர்டு, துர்கா நகர், ஜெகத் அவென்யூ, கட்டபொம்மன் தெரு, தாகூர் தெரு ஆகிய ஏழு இடங்களில், தலா 100 கி.வோல்ட் திறன் உடைய மின்மாற்றிகள் ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்டன.
அவற்றில் ஆறு மாயமாகி விட்டன. தாகூர் தெருவில் இருந்த, 100 கி.வோல்ட் திறன் மின்மாற்றியை மாற்றி, அதற்கு பதில், 63 கி.வோல்ட் திறன் மின்மாற்றியை பொருத்திஉள்ளனர்.
ஜெகத் அவென்யூவில் அமைக்கப்பட்ட மின்மாற்றி, கம்பத்துடன் மாயமாகிவிட்டது. மின்மாற்றிகளை பொருத்தியவர்களே, அவற்றை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மின்மாற்றிகள் தேவையில்லை எனில், எதற்காக கொள்முதல் செய்யப்பட்டன; வாரியத்திற்கு ஏன் இழப்பு ஏற்படுத்தினர்?
ஆறு மின்மாற்றிகள் திருடப்பட்டனவா அல்லது தனியாருக்கு விற்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மனு அளித்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புகார் மனுவை பெற்ற மின் வாரிய அதிகாரிகள், 'ஏழு மின்மாற்றிகள் திருடப்படவும் இல்லை, விற்கப்படவும் இல்லை.
அவை அனைத்தும் பழுதாகிவிட்டன. அவற்றை சரிசெய்து, வரும் 26ம் தேதிக்குள், அதே இடத்தில் பொருத்தப்படும்' என, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளனர்.
மின்மாற்றி குறித்து சந்தேகம் எழுப்பிய பின், நேற்று இரவு அவசரகதியில், சில இடங்களில் மின்மாற்றிகளை பொருத்திஉள்ளனர்.
மின் வாரியத்தினரின் இந்நடவடிக்கை பலத்த சந்தேகத்தை கிளப்புவதாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.