/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 13, 2024 12:34 AM

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவில், பக்தர்களிடம் பிரசித்த பெற்றது. இங்கு, மூலவர் அம்மன் சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலின் ஆடி மாத விழா ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர்.
இங்கு, அற்புத சக்தி விநாயகர், பவானி அம்மன் சன்னிதி, சக்தி மண்டபம், சர்வ சந்ததோஷ சக்தி மாதங்களி அம்மன், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், மகாலட்சுமி தாயாருடன் சீனிவாசபெருமாள், பரசுராமர், ஆஞ்சநேயர், புற்றுக்கோவிலும் அமைந்துள்ளது.
இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
கும்பாபிஷேக பூஜைகள் சிவாகமம் மற்றும் வைகானச முறைப்படி, வேதமூர்த்தி சிவாச்சாரியார், தாசரதி பட்டாச்சார்யார் ஆகியோர் தலைமையில் நடந்தது.
பாம்பன் சுவாமிகள்
திருவான்மியூரில் பாம்பன் குருமரகுருதாசர் கோவிலில், 36 ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு பல்வேறு காரணங்களால் திருப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
அறநிலையத்துறை பொறுப்பேற்ற பின், திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது.
காலை 6:00 மணிக்கு சித்தி விநாயகர், மயூரநாதர், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், மூலவர், உற்சவர் மூர்த்திகளுக்கு கும்பநீர் சேர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன், தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், டீக்காராமன், செந்தில் குமார், அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளீதரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
இன்று, 65 கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடைபெறுவது அறநிலையத்துறை வரலாற்றில், 20 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல்முறை.
திருவான்மியூர், பாம்பன் குமரகுருதாசர் கோவில் தொடர்பாக, 18 ஆண்டுகளாக நீதிமன்றத்திலிருந்த வழக்கு முழுதுமாக முடிவு பெற்றது.
தற்போது, கும்பாபிஷேகம் விமரிசையாக அறநிலையத்துறையால் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நி-ருபர் -