/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொழிலதிபரின் காரை பறித்த வழக்கு: மேலும் ஒருவர் கைது தொழிலதிபரின் காரை பறித்த வழக்கு: மேலும் ஒருவர் கைது
தொழிலதிபரின் காரை பறித்த வழக்கு: மேலும் ஒருவர் கைது
தொழிலதிபரின் காரை பறித்த வழக்கு: மேலும் ஒருவர் கைது
தொழிலதிபரின் காரை பறித்த வழக்கு: மேலும் ஒருவர் கைது
ADDED : செப் 14, 2025 03:26 AM

புழல்:ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் காரை பறித்த வழக்கில், மேலும் ஒருவர் சிக்கினார்; கார் மீட்கப்பட்டது.
திருவொற்றியூர், ஏகவள்ளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 40; ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவருக்கு, புழல் அடுத்த புத்தகரம், காந்தி நகரில் 3 கிரவுண்ட் நிலம் உள்ளது.
இவருக்கு அறிமுகமான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா என்பவர், இடத்தை விற்று தருவதாக கூறியுள்ளார். மேலும், அடிக்கடி பணம் கேட்டு டில்லிபாபுவிற்கு தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், சூர்யாவின் மொபைல் போன் எண்ணை, டில்லிபாபு 'பிளாக்' செய்துள்ளார். இதையடுத்து, வேறு ஒருவருடைய மொபைல் போன் எண்ணில் இருந்து, டில்லி பாபுவை தொடர்பு கொண்டு, '5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.
இல்லை என்றால் உன் பிள்ளைகளை கடத்தி விடுவேன்' என, மிரட்டி உள்ளார்.
கடந்த மாதம் 17ம் தேதி காந்தி நகரில் உள்ள இடத்தை பார்க்க டில்லிபாபு சென்றுள்ளார். இதையறிந்த சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகள், டில்லிபாபுவை தாக்கி, 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் மறுக்கவே, அவரது 'மாருதி சுசூகி' காரை பறித்து தப்பினர்.
இது குறித்து விசாரித்த புழல் போலீசார், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தமிழரசன், 28 மற்றும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தங்கவேலு, 35 ஆகியோரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பாடி, படவட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத், 27, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து டில்லிபாபுவின் கார் மீட்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான சூர்யா உட்பட இருவரை தேடி வருகின்றனர்.