Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கேன்சர் மருத்துவமனை சிக்னல் நெரிசலை குறைக்க 900 மீட்டரில் புதிதாக சாலை அமைகிறது

கேன்சர் மருத்துவமனை சிக்னல் நெரிசலை குறைக்க 900 மீட்டரில் புதிதாக சாலை அமைகிறது

கேன்சர் மருத்துவமனை சிக்னல் நெரிசலை குறைக்க 900 மீட்டரில் புதிதாக சாலை அமைகிறது

கேன்சர் மருத்துவமனை சிக்னல் நெரிசலை குறைக்க 900 மீட்டரில் புதிதாக சாலை அமைகிறது

ADDED : செப் 27, 2025 12:03 AM


Google News
Latest Tamil News
சென்னை, அடையாறு, கேன்சர் மருத்துவமனை சிக்னலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 900 மீட்டர் நீளத்தில் புதிய 'பைபாஸ்' சாலை அமைகிறது.

கிண்டி - அடையாறு, சர்தார் படேல் சாலை, சென்னையின் முக்கிய வழித்தடமாக உள்ளது.

கிண்டி, பூந்தமல்லி, கோயம்பேடு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அடையாறு, ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., நோக்கி பயணிக்க, சர்தார் படேல் சாலை வழியாக செல்ல வேண்டும். இதனால், இந்த சாலை எப்போதும் நெரிசலாக இருக்கும்.

'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரத்தில், அதிகளவில் வரும் வாகனங்களால், கேன்சர் மருத்துவமனை சிக்னலில் இருந்து, சைதாப்பேட்டை, சின்னமலை வரை நெரிசல் நீடிக்கும்.

இதனால், சர்தார் படேல் சாலையை விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து, மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டி வருகிறது.

அதேபோல் அதிக நெரிசல் உள்ள அடையாறு கேன்சர் மருத்துவமனை சந்திப்பு சிக்னலில் மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலையில் இருந்து, கேன்சர் மருத்துவமனை சிக்னல் வழியாக, கிண்டி மற்றும் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., நோக்கி அதிகமான வாகனங்கள் செல்கின்றன.

குறுகிய இடமாக உள்ளதால், இந்த சிக்ன லில் இருந்து இடது திசையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், நெரிசல் அதிகரிக்கிறது. இதை குறைக்க, இப்பகுதியில் புதிதாக சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

அடையாறு சிக்னலை ஒட்டி சி.எல்.ஆர்.ஐ., எனும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சுவர் மற்றும் காலி இடம் உள்ளது.

இந்த இடத்தை வாங்கி, காந்தி மண்டபம் சாலையில் இருந்து, சர்தார் படேல் சாலையை இணைக்கும் வகையில், சி.எல்.ஆர்.ஐ., வளாகத்தில், 900 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் புதிதாக சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம், கேன்சர் மருத்துவமனை சிக்னலுக்கு செல்லாமல், இந்த பைபாஸ் சாலை வழியாக, சர்தார் பட்டேல் சாலையை அடைந்து, அங்கிருந்து எளிதாக அடையாறு, ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., செல்ல முடியும்.

சி.எல்.ஆர்.ஐ., நிறுவனமும், இடம் வழங்க முன்வந்துள்ளது. சாலை அமைக்கும் பணி, சாலைக்கான இடம் போக மீதமுள்ள சிறிய இடத்தில் நீரூற்றுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணியையும் நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ள உள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய கைலாஷ் மேம்பாலம், சர்தார் படேல் சாலை விரிவாக்க பணி இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

காந்தி மண்டபம் சாலையில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள், சிக்னலில் இடது திசையில் திரும்பி 200 மீட்டர் துாரத்தில், 'யு - டர்ன்' செய்து செல்லும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்த பின், புதிய சாலை அமைக்கும் பணி துவங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us