Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிண்டி ரேஸ் கிளப்பில் குளங்கள் சென்னைக்கு தேவை: ஐகோர்ட்

 கிண்டி ரேஸ் கிளப்பில் குளங்கள் சென்னைக்கு தேவை: ஐகோர்ட்

 கிண்டி ரேஸ் கிளப்பில் குளங்கள் சென்னைக்கு தேவை: ஐகோர்ட்

 கிண்டி ரேஸ் கிளப்பில் குளங்கள் சென்னைக்கு தேவை: ஐகோர்ட்

ADDED : டிச 02, 2025 04:06 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னை கிண்டியில், ரேஸ் கிளப் நிலத்தில், அதிகப்படியாக மழைநீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கிண்டியில் ரேஸ் கிளப் உள்ளது. 160.86 ஏக்கர் நிலத்தை, 99 ஆண்டுகளுக்கு என ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு, அரசு குத்தகைக்கு வழங்கியது. 730.86 கோடி ரூபாய் குத்தகை பாக்கி வைத்ததால், அந்த இடத்தை தமிழக அரசு மீட்டது. தற்போது இந்த இடத்தின் மதிப்பு 6,500 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.

அந்த இடத்தில், 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை துறை சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழைநீரை சேமிக்க, நான்கு குளங்கள் என, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை எதிர்த்தும், நிலத்தை சுவாதீனம் செய்ததை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஏற்கனவே உள்ள நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த மனுவை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அரசு சிறப்பு பிளீடர் டி.ரவிசந்தர் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில், கடந்த 2015 நவ., - டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளம், பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்தியது.

இதில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வடகிழக்கு பருவமழையின்போது, மொத்தம் 470 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சென்னை நகரைச் சுற்றியுள்ள சதுப்பு நிலங்களில், காளான்கள் போல கட்டுமானங்கள் பெருகி வருவதால், நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தால், மழை, வெள்ளத்தின் பாதகமான தாக்கம் குறித்து, பல ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.

மழை வெள்ளத்தால், 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். சென்னையில் உள்ள குடும்பங்கள் 2 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை உடைமைகளை இழந்தன.

சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகப்படியான மழைநீரைச் சேமிக்க குளங்களை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாக, அரசு மேற்கொள்ளும் அனைத்து பணிகளிலும் மக்கள் நலனே மேலோங்கி உள்ளது. எனவே, அப்பணிகளை அரசு தொடரலாம்.

அரசு மேற்கொள்ளும் பணிகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கிண்டி, பள்ளிக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தின் பாதகமான தாக்கத்தைக் குறைக்கும்.

கடந்த காலங்களில், சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும்போது, இதுபோன்ற திட்டங்கள் தேவை.

வெள்ள தடுப்பு மேலாண்மையில் கடும் குறைபாடுகள் இருப்பது, பல்வேறு ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது.

எனவே, இதற்கு தீர்வு, தடுப்பு மற்றும் நீண்டகால உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசர மற்றும் கட்டாயத் தேவையை, அரசின் இந்த திட்டங்கள் நிரூபிக்கின்றன.

சென்னை போன்ற நகரங்களில், நிலம் என்பது மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு நிலத்தை குறிப்பிட்ட தனி நபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போல் ஆகும்.

எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us