Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: திணறும் போலீசார்

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: திணறும் போலீசார்

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: திணறும் போலீசார்

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: திணறும் போலீசார்

ADDED : செப் 24, 2025 12:46 AM


Google News
சென்னை : சென்னையில் சமீபமாக பிரபலங்களின் வீடுகள், கல்வி நிலையங்கள் மற்றும் விமான நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மிரட்டல் வருவது தொடர்கதையாகி உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும், ஐந்து இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆனால், மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டறிவதில், போலீசார் திணறி வருகின்றனர்.

சென்னையில், மத்திய - மாநில அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி தனியார் பள்ளி, கல்லுாரிகள், வணிக வளாகங்கள் என, பல்வேறு இடங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் மூலம் அடுத்தடுத்து வந்துக் கொண்டே இருக்கிறது.

இ - மெயில்களில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி அவரது உறவினர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு செயலர்கள் என, பல்வேறு பெயர்களை குறிப்பிட்டு மிரட்டல் வருகின்றன.

ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் இடங்களுக்கு, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

புரளி சென்னையில் நேற்று ஒரே நாளில், அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீடு, நந்தம்பாக்கம் வர்த்தக மையம், புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம், தலைமைச் செயலகத்தில் உள்ள மிலிட்டரி கேன்டீன் உட்பட ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள், இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து, அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் மர்ம பொருட்கள் ஏதும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

குற்றச்சாட்டு மர்ம நபர்கள், இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து மிரட்டல் விடுக்கின்றனர்.

இவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.

ஒவ்வொரு முறை வெடிகுண்டு மிரட்டல் வரும்போதெல்லாம் கீறல் விழுந்த 'சிடி' போல போலீஸ் அதிகாரிகள் தெரிவிப்பது தொடர் கதையாகிவிட்டது. ஆனால் மர்ம நபர்கள் குறித்து, துப்பு துலக்க முடியாமல் திணறி வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் வருவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டதால், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பணிச்சுமையில் சிக்கி தவிக்கின்றனர்.

வெடிகுண்டு செயலி ழப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் இடங்களுக்கு செல்ல போதிய வாகனங்கள் இல்லை. மிரட்டல் விடுக்கப்படும் இடங்களுக்கு விரைந்து செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். போதுமான சோதனை கருவிகளும் இல்லை' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us