Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னையில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் துாண்களை காணோம் வாடிக்கையாளர்கள் தவிப்பு; அதிகாரிகள் உறக்கம்

சென்னையில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் துாண்களை காணோம் வாடிக்கையாளர்கள் தவிப்பு; அதிகாரிகள் உறக்கம்

சென்னையில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் துாண்களை காணோம் வாடிக்கையாளர்கள் தவிப்பு; அதிகாரிகள் உறக்கம்

சென்னையில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் துாண்களை காணோம் வாடிக்கையாளர்கள் தவிப்பு; அதிகாரிகள் உறக்கம்

ADDED : செப் 30, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் துாண்கள், சென்னையில் அடுத்தடுத்து காணாமல் போகும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் புலம்பும் நிலையிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போலீசில் புகார் கொடுக்காமல் மவுனம் காப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களைவிட குறைந்த கட்டணத்தில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., சேவை வழங்கி வருகிறது.

இருப்பினும், நகரின் பல இடங்களில் பழைய உள்கட்டமைப்புடன் கூடிய டவர்கள், நெட்வொர்க் மற்றும் சிக்னல் பிரச்னைகளால், சில ஆண்டுகளாக இந்நிறுவனம் திண்டாடி வருகிறது.

சர்ச்சை அவசரத்துக்கு போன் பேச முடியாமலும், இணையதளத்தை பயன்படுத்த முடியாமலும், வாடிக்கையாளர்கள் தினமும் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், 25 ஆண்டு களுக்கு முன் காப்பர் கேபிள் வாயிலாக துாண்களை அமைத்தது. இந்த துாண்கள் வாயிலாக, 'பிராட்பேண்ட்' சேவைகளுக்கான இணைப்பு தரப்பட்டுள்ளது.

தற்போது, புரசைவாக்காம், தி.நகர், வேப்பேரி உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவன துாண்களை காணவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக மாயமாகி வருகின்றன.

மர்ம நபர்களால் சட்ட விரோதமாக திருடப் படுகின்றனவா அல்லது இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியாக துாண்கள் அகற்றப்பட்டனவா என தெரியவில்லை.

துாண்கள் மாயமானது குறித்து புகார் அளிக்க வேண்டிய பி.எஸ். என்.எல்., அதிகாரிகளும், கண்டுகொள்ளாமல் மவுனமாக இருக்கின்றனர். இது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

துாண்கள் தகர்ப்பு இதுகுறித்து, தொலை தொடர்பு வல்லுநர்கள் சிலர் கூறியதாவது:

நகரின் பல பகுதிகளில் அமைக்கப்பட்ட காப்பர் கேபிள் கொண்ட துாண்கள் வாயிலாக, பி.எஸ்.என்.எல்., நிறுவன பிராட்பேண்ட் சேவைகள் வழங்கப்பட்டன.

சமீப காலமாக அந்த முறை மாற்றப்பட்டு, 'ஆப்டிகல் பைபர்' கேபிள் முறையில் படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால், ஏற்கனவே அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள துாண்களை பற்றி, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

சென்னை முழுதும் மாநகராட்சி அனுமதியுடன் நுாற்றுக்கணக்கான துாண்கள், நடைபாதை மற்றும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.

சாலையோரத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு வருவதால், இடையூறாக இருப்பதாக கருதி சிலர், இரவு நேரங்களில் துாண்களை தகர்த்து விடுகின்றனர்.

சந்தேகம் அதன் உள்ளே இருக்கும் காப்பர் ஒயர்களையும் சிலர் திருடி, விற்று பணம் பார்க்கின்றனர். சென்னை முழுதும், 25க்கும் மேற்பட்ட துாண்களை சமூக விரோதிகள் துாண்களை அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் போலீசில் புகார் கொடுக்காமல் உள்ளனர்.

இதனால், திருடு போவதற்கு அதிகாரிகளும் உடந்தையா; தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மறைமுக ஆதரவு அளிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த விவகாரத்தில், பி.எஸ்.என்.எல்., உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீசில் புகார் தரப்படும் சென்னையின் பல பகுதிகளில் இருந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவன துாண்கள் காணாமல் போனதாக புகார்கள் வருகின்றன. இதற்கு உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்பபடி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். - ஸ்ரீராம், பி.எஸ்.என்.எல்., சென்னை வட்ட விஜிலென்ஸ் அதிகாரி.

நேரடி புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை கடந்த இரண்டு மாதங்களாக புளியந்தோப்பு, புரசைவாக்கம் பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., துாண்கள் மாயமானது தொடர்பாக, பி.எஸ்.என்.எல்., விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும், தலைமை பொது மேலாளருக்கும் நேரடியாக புகார் தெரிவித்தோம்; நடவடிக்கை இல்லை. துாண்கள் காணாமல் போனால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் அளிப்பதில்லை. இதுவே, தொடர்ந்து துாண்கள் திருடு போக காரணமாகிவிடுகிறது. - வி.சத்தியபாலன், முன்னாள் உறுப்பினர், தொலைதொடர்பு ஆலோசனை கமிட்டி.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us