Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரைகுறை மழைநீர் வடிகால்வாய் பணியால் ஆபத்து !   வெள்ளத்தில் சிக்கி திணறப்போகுது சென்னை

அரைகுறை மழைநீர் வடிகால்வாய் பணியால் ஆபத்து !   வெள்ளத்தில் சிக்கி திணறப்போகுது சென்னை

அரைகுறை மழைநீர் வடிகால்வாய் பணியால் ஆபத்து !   வெள்ளத்தில் சிக்கி திணறப்போகுது சென்னை

அரைகுறை மழைநீர் வடிகால்வாய் பணியால் ஆபத்து !   வெள்ளத்தில் சிக்கி திணறப்போகுது சென்னை

ADDED : செப் 25, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
வடகிழக்கு பருவமழை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால்வாய் பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளதால், சென்னை மாநகரம் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியும் பொறுப்பை உணராமல், 'அதிகமாக மோட்டார்களை வாடகைக்கு எடுத்துள்ளோம்' எனக்கூறி வருவது, மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியில், 3,040 கி.மீ., மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை, 1,500 கி.மீ., மழைநீர் வடிகால்வாய் மட்டுமே துார் வாரப்பட்டுள்ளது.

புதிய மழைநீர் வடிகால்வாய், பழைய மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு, மழைநீர் வடிகால்வாய் இணைப்பு உள்ளிட்ட பணிகள், 1,032 கோடி ரூபாயில் நடந்து வருகின்றன.

மந்தகதி குறிப்பாக, திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை செப்., 15க்குள் முடிக்க வேண்டும் என, மாநகராட்சி அறிவுறுத்தியது.

ஆனால், பெரும் பாலான ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கும், மாநகராட்சி உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லாத வகையில் செயல்பட்டுள்ளனர். இதனால், ஆங்காங்கே மழைநீர் வடிகால்வாய் பணிகள் பாதியில் முடங்கியுள்ளன.

இதுதவிர, நெடுஞ் சாலைத்துறையும் தன் பங்கிற்கு பல இடங்களில் சாலைகளை தோண்டி, இன்னும் பணிகளை முடிக்காமல் வைத்துள்ளது.

மழைநீர் கால்வாய் பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ள பகுதிகளில் மட்டும், பருவ மழை துவங்கும் வரை பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பணிகளும் மந்தகதியில் தான் நடந்து வருகிறது.

மூழ்கும் நிலை சென்னை மற்றும் புற நகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்வாய்க்கான இணைப்புகள், மெட்ரோ ரயில் பணி, சாலை மேம்பாடு பல்வேறு வளர்ச்சி பணிகளால் துண்டிக்கப்பட்டு உள்ளன.

உட்புற பகுதிகளில் கட்டமைக்கப்படும் மழைநீர் கால்வாய், பிரதான சாலையில் கட்டப்பட்டுள்ள கால்வாயுடன் இணைந்து, முக்கிய நீர்வழித்தடங்களில் மழைநீர் கலக்கும் வகையில், இவற்றுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்படும்.

சென்னையின் பல இடங்களில், இந்த இணைப்பு பணி முடியாததால், அடுத்த மாதம் துவங்கவுள்ள வடகிழக்கு பருவமழைநீர் செல்ல வழியின்றி, குடியிருப்புகள், பிரதான சாலைகள் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உள்ளது.

வட மாநிலங்களில், மேக வெடிப்பு காரணமாக ஒரே நேரத்தில் அதிகளவு மழை பெய்து அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதுபோன்று இங்கும் பெய்தால், வெள்ளத்தில் சென்னை தத்தளிப்பதை யாராலும் தடுக்க முடியாத நிலை ஏற்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமாளிப்பு இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் மெட்ரோ போன்ற வளர்ச்சி பணிகளால், மழைநீர் கால்வாய்களில் இணைப்பு பல இடங்களில் துண்டிக்கப் பட்டுள்ளது உண்மைதான். மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தற்காலிக இணைப்பு வழங்கவும், அதேபோல், மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளி யேற்றவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பிலும், 500க்கும் மேற்பட்ட மோட்டார்கள், மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகளவு மழை பெய்தால் சிரமம் தான் என்றாலும், சமாளிக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எல்லா இடங்களிலும் பிரச்னைதான்

 சூளைமேடு - அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள, லோகநாதன் நகர், எம்.எம்.டி.ஏ., காலனி, விநாயகபுரம் பிரதான சாலை, சூளைமேடு அண்ணா நெடும்பாதை யிலும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிலுவையில் உள்ளன  வில்லிவாக்கம், 95வது வார்டு நாதமுனி அருகில் திருமங்கலம் சாலை வழியாக சென்ற வடிகால்வாய் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. ஒரே இடத்தில், பல காரணங்களால் மூன்று ஒப்பந்ததாரர்கள் மாறியும் பணிகள் இன்னும் முடியவில்லை  வடபழனி 100 அடி சாலை, அழகிரி தெரு முதல் அரும்பாக்கம் வரை, வடிகால்வாய் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது  மாதவரம் - சூரப்பட்டு பிரதான சாலை, விஜயலட்சுமி நகர் சந்திப்பில், ஓராண் டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணி, தற்போது தான் துவங்கியுள்ளது. அய்யன் திரு வள்ளுவர் சாலை மற்றும் சூரப்பட்டு சாலை சந்திப்பிலும், நேற்று முன்தினம் தான் பணிகள் துவங்கியுள்ளன  புழல், புத்தகரம் - அம்பத்துார் சர்வீஸ் சாலையில், நான்கு மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த வடிகால்வாய் பணி இன்னும் முடியாமல் உள்ளது  திருவொற்றியூர், ஆறாவது வார்டு, மணலி விரைவு சாலையோரம், மதுரா நகர் - கலைஞர் நகர் வரையில், 180 மீட்டர் மழைநீர் வடிகால்வாய் கிடப்பில் உள்ளது  திருவொற்றியூர் நான்காவது வார்டு, வி.பி., நகர் உள்ளிட்ட மூன்று பகுதி களில் இருந்து, பகிங்ஹாம் கால்வாயுடன் இணையும் பிரதான கால்வாய்களுக்கு மதகுகள் அமைக்கப்படவில்லை. இதனால், கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவொற் றியூர் மேற்கு பகுதி ஆபத்தில் சிக்கும்  ஆவடி, கோவில் பதாகை இந்திரா நகர் முதல் கன்னடபாளையம் வரை, சாலையின் இருபுறமும் வடிகால்வாய் கட்டப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளாகியும் இந்திரா நகர் அருகே சாலையில், வடிகால்வாய் இணைப்பு கொடுக்கும் பணி அரைகுறையாக உள்ளது. இவை உதாரணத்திற்குதான். இன்னும் பல இடங்களில் இதே நிலைதான்.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us