Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தென் சென்னையில் குறையும் நிலத்தடி நீர்மட்டம்: காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் குடிநீர் வாரியம்

தென் சென்னையில் குறையும் நிலத்தடி நீர்மட்டம்: காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் குடிநீர் வாரியம்

தென் சென்னையில் குறையும் நிலத்தடி நீர்மட்டம்: காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் குடிநீர் வாரியம்

தென் சென்னையில் குறையும் நிலத்தடி நீர்மட்டம்: காரணம் தெரியாமல் விழிபிதுங்கும் குடிநீர் வாரியம்

ADDED : செப் 27, 2025 11:52 PM


Google News
சென்னை:கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்தும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தென் சென்னையில் உள்ள அடையாறு, ஆலந்துார், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் மண்டலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. வெள்ள பாதிப்பை கடத்தும் முக்கிய நீர்நிலைகள் இருக்கும் நிலையில், மூன்று ஆண்டுகளாக நிலத்தடி நீர் குறைந்து வருவதற்கான காரணம் தெரியாமல், குடிநீர் வாரியம் விழிபிதுங்கி உள்ளது.

தென் சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள 62 ஏரிகளில் இருந்து வடியும் உபரிநீர், ஒக்கியம் மடுவு, பகிங்ஹாம் கால்வாய் வழியாக அடையாறு முகத்துவாரம் மூலம் கடலில் கலக்கிறது. இந்த நீரோட்டத்தில் தடை ஏற்பட்டால், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்படும்.

கடந்தாண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை கருத்தில் கொண்டு, கோவளம் வடிநில திட்டத்தின் கீழ், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் பெரும்பாலான சாலைகளை ஒட்டி வடிகால்வாய், கால்வாய்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி., நிறுவனங்கள் வருகை அதிகரித்ததால், மண் பரப்பு குறைந்துவிட்டது. பல பகுதிகள் கான்கிரீட் கட்டமைப்பாக இருப்பதால், மண்ணின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெய்யும் மழைநீர் நிலத்திற்குள் இறங்கவில்லை.

தவிர, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, இருப்பதை முறையாக பராமரிக்காதது, மழைநீர் சேகரிப்பில் தொலைநோக்கு பார்வையில்லாததால் பூமிக்குள் நிலத்தடி நீர் தங்குவதில்லை.

சென்னை மாநகராட்சியின் நிலப்பரப்பு, மணல், களிமண், பாறையான அடுக்குகள் அடங்கியது என்பதால், 200 வார்டுகளில் நிலத்தடி நீரை கணக்கிட, அளவுமானிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென் சென்னையில் உள்ள மண்டலங்களில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு, கோடையில் அவ்வப்போது மழை பெய்தது. சில நேரம், போக்குவரத்து முடங்கும் வகையில் கனமழையும் பெய்துள்ளது. தென் மேற்கு பருவமழையும் ஓரளவு கைகொடுத்தது. எனினும், நிலத்தடிநீர் மட்டம் பெரிய அளவில் உயரவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும்போது ஆக., மாதத்தில், அண்ணா நகர் மண்டலத்தில், 2023ம் ஆண்டைவிட, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 அடி குறைந்துள்ளது. சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 2024ஐ விட, 2025 ஆக., மாதத்தில், 4 அடி குறைந்துள்ளது.

தவிர ஆலந்துார், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களில், படிப்படியாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் தெரியாமல், குடிநீர் வாரிய அதிகாரிகளும் விழிபிதுங்கி வருகின்றனர்.

இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பகிங்ஹாம் கால்வாய், ஒக்கியம் மடுவு உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகள் இருந்தும், தென் சென்னையில் அடையாறு, ஆலந்துார், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் மண்டலங்களில், நிலத்தடி நீர் குறைந்து வருவது புரியாத புதிராக உள்ளது.

கட்டுமான பணிகள் அதிகளவில் நடப்பது ஒரு காரணமாக இருந்தாலும், வேறு ஏதாவது காரணம் இருக்குமா என தெரியவில்லை.

எனினும், நான்கு மண்டலங்களில் தீவிர ஆய்வு செய்து, நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கான காரணத்தை ஆராய்வதோடு, அதை உயர்த்தும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us