/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் கட்டுமான திட்ட அனுமதிக்கு தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் கட்டுமான திட்ட அனுமதிக்கு தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் கட்டுமான திட்ட அனுமதிக்கு தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் கட்டுமான திட்ட அனுமதிக்கு தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் கட்டுமான திட்ட அனுமதிக்கு தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : செப் 26, 2025 12:44 AM
சென்னை, 'பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், எந்த திட்ட அனுமதியோ அல்லது கட்டுமான ஒப்புதலையோ வழங்கக்கூடாது' என, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனம், 1,400க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதற்காக, சதுப்பு நிலத்தில் சாலை அமைக்கப்படுகிறது.
அங்குள்ள நீர்நிலைகளில், டன் கணக்கில் கட்டுமான பொருட்கள், மண் கொட்டப்படுவதால், ராம்சர் சதுப்பு நில பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதிக்கப்படுவதாக, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, பல்வேறு இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், உறுப்பினர் பிரசாந்த் கர்கவா பிறப்பித்த உத்தரவு:
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தென் மாநிலங்களில் நன்கு அறியப்பட்ட பகுதி. எஞ்சியிருக்கும் கடைசி சதுப்பு நிலம் இதுதான்.
இந்த சதுப்பு நிலப்பகுதி முக்கியமான வெள்ளத் தடுப்பு அரணாகவும், இடம்பெயர்வு பறவைகள் மற்றும் அழிந்து வரும் ஊர்வன உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் வாழ்விடமாகவும் உள்ளது.
ஏற்கனவே, விரிவான உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் சதுப்பு நில பகுதிகள் சுருங்கிவிட்டன. இந்த தளத்துக்கு ஏற்ற சுற்றுச்சூழல், சுற்றுலா முயற்சிகளை வகுக்க, உள்ளூர் பங்களிப்புடன் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம்சர் சதுப்பு நில கணக்கெடுப்பு மற்றும் ராம்சர் தளத்தை பராமரிப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நீர்வளத்துறை, மாநில சதுப்பு நில ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து, ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இப்பகுதியில், எந்தவொரு மேம்பாட்டு பணிகளையும் அனுமதிக்கும்முன், ராம்சர் தளத்தின் புவியியல் பகுதியை, அறிவியல் ரீதியாக வரையறுக்க வேண்டும்.
அதன்படி, ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் இறுதி செய்யப்படும் வரையும், மாநில சதுப்பு நில ஆணையம், சதுப்பு நில பகுதியை அறிவியல் ரீதியாக தீர்மானிக்கும் வரையும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், எந்த திட்ட அனுமதியோ அல்லது கட்டுமான ஒப்புதலையோ வழங்கக்கூடாது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், திட்ட அனுமதி வழங்குவதைக் கருத்தில் கொள்ளும்போது, ராம்சர் பகுதிகளை பராமரிக்கும் வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.