ADDED : செப் 24, 2025 12:48 AM
பைக்கை விட்டு சென்ற திருடர்கள்
சேலையூர்: நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் கலன், 18. இவர், சேலையூர், விஜயநகரில் உள்ள ஹோட்டலில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, ஹோட்டலின் வெளியே நின்றிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். திருடர்களை ரோந்து போலீசார் துரத்தினர். சேலையூர், அகரம்தென் பிரதான சாலை அருகே சென்றபோது, திருடர்கள் 'அப்பாச்சி' பைக்கை போட்டு விட்டு ஓடி தப்பினர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
போதை நபரிடம்
செயின் பறித்தவர் கைது
போரூர்: காரம்பாக்கம் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ராஜ்கிரண், 27. இவர், நேற்று முன்தினம் மதியம் ஆலப்பாக்கம் சுண்ணாம்பு கால்வாய் அருகே, மது போதையில் கிடந்துள்ளார்.
அப்போது, அவரது அரை சவரன் செயினை பறித்து தப்ப முயன்ற மர்ம நபரை, பகுதிமக்கள் பிடித்து மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர், காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன், 50, என, தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
வழிப்பறி திருடர்கள்
மூவர் கைது
புழல்: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாஸ், 28. புழல் வெஜிடேரியன் வில்லேஜில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் தங்கி, லாரி ஓட்டுநராக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை, நிறுவன வாயில் அருகே நின்றபோது, பைக்கில் வந்த மூவர், ஜோதிபாஸிடம் அரிவாளை காட்டி மிரட்டி, மொபைல் போன், 1,400 ரூபாய் பறித்து தப்பினர். இது குறித்து விசாரித்த புழல் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட இம்ரான்கான், 21, விக்னேஷ், 25, மற்றும் ஆனந்தன், 28, ஆகிய மூவரை கைது செய்தனர்.
கைதிகளுக்கு கஞ்சா வீசிய வாலிபர் கைது
புதுப்பேட்டை: ஆயுதப்பேட்டை போலீசார், கடந்த ஆக., 4ம் தேதி, புழல் சிறையில் இருந்து 14 கைதிகளை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை மையத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணை முடிந்து திரும்புகையில், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, அம்பேத்கர் கல்லுாரி சிக்னல் அருகே, ஆட்டோவில் வந்த மர்ம நபர் கும்பல், கஞ்சா பாக்கெட்கள் அடங்கிய உருண்டையை கைதிகள் வாகனத்தில் வீசி தப்பியது.
இது குறித்து விசாரித்த எம்.கே.பி., நகர் போலீசார் மூவரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி சஞ்சய், 24, என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார்.