/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.1.25 கோடி மண்டப பணி கிடப்பில் வாரியம், கட்டுமான நிறுவனம் மோதலால் வீணாகும் நிதிரூ.1.25 கோடி மண்டப பணி கிடப்பில் வாரியம், கட்டுமான நிறுவனம் மோதலால் வீணாகும் நிதி
ரூ.1.25 கோடி மண்டப பணி கிடப்பில் வாரியம், கட்டுமான நிறுவனம் மோதலால் வீணாகும் நிதி
ரூ.1.25 கோடி மண்டப பணி கிடப்பில் வாரியம், கட்டுமான நிறுவனம் மோதலால் வீணாகும் நிதி
ரூ.1.25 கோடி மண்டப பணி கிடப்பில் வாரியம், கட்டுமான நிறுவனம் மோதலால் வீணாகும் நிதி
ADDED : பிப் 12, 2024 02:29 AM

கண்ணகி நகர்:கண்ணகி நகரில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 240 ஏக்கர் பரப்பில், 23,704 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இங்கு, 2000ல், உழவர் சந்தை கட்டப்பட்டது.
விவசாயிகள் வருகை இல்லாததால், 7,424 சதுர அடி பரப்பளவு உடைய இந்த இடத்தில், திருமண மண்டபம் கட்ட, தென் சென்னை தொகுதி தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், 1.25 கோடி ரூபாய் ஒதுக்கினார்.
இதில், 5,000 சதுர அடி பரப்பில், 200 பேர் அமரக்கூடிய, இரண்டடுக்கு திருமண மண்டபம் கட்டும் பணி, 2023 ஜன., மாதம் துவங்கியது. 'பேரல்' என்ற தனியார் கட்டுமான நிறுவனம், இப்பணியை மேற்கொண்டது.
இதையடுத்து, கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது, கழிவுநீர் செல்லும் பிரதான குழாய் இருப்பது தெரிந்தது. இதை இடம் மாற்றி அமைக்க, 55 லட்சம் ரூபாய் செலவாகும் என, குடிநீர் வாரியம் கூறியுள்ளது.
இதனால், குழாய்க்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அருகில் பில்லர் எழுப்பி, கட்டுமான பணியை துவக்க வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்தினர். இதற்கு, கட்டுமான நிறுவனம் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, கட்டுமான நிறுவனத்திற்கும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கும் ஏற்பட்ட மோதலால், ஓராண்டாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:
துவங்கிய வேகத்தில் பணி நடந்திருந்தால், திருமண மண்டபம் பயன்பாட்டுக்கு வந்திருக்கும். நிதி ஒதுக்கிய எம்.பி.,யின் பதவி காலம், ஓரிரு மாதத்தில் முடிகிறது.
இப்போது பணி துவங்கினால் நல்லது. இல்லையென்றால், நிதி வேறு பயன்பாட்டுக்கு திரும்பி செல்லும்.
ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், மண்டபம் கட்ட எம்.பி.,யும், அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பணி துவங்க, கட்டுமான நிறுவனத்திற்கு பல்வேறு 'நோட்டீஸ்'கள் வழங்கி விட்டோம். இருந்தும் பணி துவங்கவில்லை. 'பணி செய்ய இயலாது' என கடிதம் தந்தால், பள்ளத்தை நாங்களே மூடி விடுவோம்.
இல்லையென்றால், கட்டுமான நிறுவனம் தான் மூட வேண்டும். இதற்கு மேல் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். பள்ளத்தால் ஆபத்து ஏற்படாத வகையில், சுற்றி வேலி அமைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.