ADDED : செப் 24, 2025 03:49 AM

கானத்துார்: இ.சி.ஆர்., கானத்துாரில், சாலையோரம் துாங்கிக் கொண்டிருந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில், பைக்கை ஓட்டிவந்த வாலிபர் சாலையில் விழுந்து பலியானார்.
கேரளா மாநிலம், எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த வர்கீஸ் மகன் ஜேக்கப், 23. கானத்துாரில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் படித்தார். முந்தைய தேர்வுகளில் தோல்வியடைந்த பாடத்தை எழுத, இரு தினங்களுக்கு முன், இ.சி.ஆர்., கானத்துார் சென்று, நண்பர்கள் அறையில் தங்கி தேர்வு எழுதினார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, பல்சர் இருசக்கர வாகனத்தில் முட்டுக்காடு சென்று, டீ குடித்துவிட்டு, அதே சாலையோரமாக வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். ஹெல்மெட் அணியவில்லை.
அதிவேகமாக சென்றபோது, சாலையோரம் துாங்கிக் கொண்டிருந்த மாட்டின் மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் நிலைதடுமாறிய அவர், சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.