Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேவை 2,000 வீடுகள்; ஒதுக்கீடு 144 மட்டுமே! கனவு இல்ல விண்ணப்பதாரர்கள் அதிருப்தி

தேவை 2,000 வீடுகள்; ஒதுக்கீடு 144 மட்டுமே! கனவு இல்ல விண்ணப்பதாரர்கள் அதிருப்தி

தேவை 2,000 வீடுகள்; ஒதுக்கீடு 144 மட்டுமே! கனவு இல்ல விண்ணப்பதாரர்கள் அதிருப்தி

தேவை 2,000 வீடுகள்; ஒதுக்கீடு 144 மட்டுமே! கனவு இல்ல விண்ணப்பதாரர்கள் அதிருப்தி

ADDED : ஜூலை 17, 2024 12:10 AM


Google News
அன்னுார்;அன்னுார் ஒன்றியத்தில், 2,000 விண்ணப்பதாரர்களில், 144 பேருக்கு மட்டும் கனவு இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் 360 சதுரடியில் வீடு கட்ட மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக ஊராட்சிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு அன்னுார் ஒன்றியத்தில் 144 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள, 21 ஊராட்சிகளில், 18 ஊராட்சிகளுக்கு மட்டும் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த 121 பேருக்கும், மற்றவர்கள் 43 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாரணாபுரம், காட்டம்பட்டி, அல்ல பாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் ஒரு பயனாளி கூட தேர்வு செய்யப்படவில்லை. அதிகபட்சமாக ஆம்போதி ஊராட்சியில் 22 பயனாளிகளும், வடக்கலுாரில் 20 பேரும், அக்கரை செங்கப்பள்ளியில் 16 பேரும், ஒட்டர்பாளையத்தில் 10 பேரும், காரே கவுண்டன் பாளையம் ஊராட்சியில் மூன்று பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில்,' எங்கள் ஊராட்சியில் சொந்த நிலமும் வீடும் இல்லாத 500 குடும்பங்கள் உள்ளன. ஆனால் வெறும் மூன்று பயனாளிகள் மட்டுமே இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எட்டு ஆண்டுகளாக ஜமாபந்தியிலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும், கிராம சபை கூட்டத்திலும் மனு கொடுத்து வருகிறோம். இதுவரை வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் ஊராட்சியில் தொகுப்பு வீடு திட்டத்தில் ஒருவருக்கு கூட வீட்டு கட்டித்தரப்படவில்லை. இந்த ஆண்டாவது 500 பேருக்கு இந்தத் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என்றனர்.

வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், 'பெரும்பாலான ஊராட்சிகளில் வீடு இல்லாதவர்களில் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சொந்த வீடும், நிலமும் இல்லாத 2000 குடும்பங்களில் 144 குடும்பங்களுக்கு மட்டுமே தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை உயர்த்தி குறைந்தது அன்னுார் ஒன்றியத்தில் 500 பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us