/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மணிக்கணக்கில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் திணறிய பணியாளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் திணறிய பணியாளர்கள்
மணிக்கணக்கில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் திணறிய பணியாளர்கள்
மணிக்கணக்கில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் திணறிய பணியாளர்கள்
மணிக்கணக்கில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் திணறிய பணியாளர்கள்
ADDED : ஜூன் 29, 2024 12:37 AM
- நமது நிருபர் -
இலவச காதொலி கருவி, தையல் இயந்திரம் பெறுவதற்காக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வந்த மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர்களை, மணிக்கணக்கில் காத்திருக்க நேரிட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக, அவர்களின் பொருளாதார ரீதியில் மேம்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், காதொலி கருவி மற்றும் தையல் இயந்திரம் நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. இதற்காக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களை, காலை, 10:00 மணிக்குள் அலுவலகத்துக்கு வருமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களும் காலை, 9:30 மணி முதலே, வந்துவிட்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், தான் கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாமுக்கு சென்றுவிட்டார். செயல் திறன் அலுவலரும் விடுப்பில் சென்றுவிட்டார்.
தட்டுத்தடுமாறி...
போதிய அனுபவமில்லாததால், கருவிகளை சரிபார்த்து பயனாளி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க பணியாளர்கள் தடுமாறினர்.
காதொலி கருவிக்காக வந்த, 24 மாற்றுத்திறனாளிகள், தையல் இயந்திரத்துக்காக வந்த பாதுகாவலர்கள் 15 பேர், அலுவலகத்துக்கு வெளியே 'பெஞ்ச்'சில் நீண்ட நேரம், காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
காதொலி கருவி வழங்க, மதியம், 1:00 மணிக்கு மேலாகிவிட்டது. ஐந்து மணி நேரம் வரை பசியுடன் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால், தையல் இயந்திரம் வாங்க வந்த மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மதியம், 2:30 மணிக்குப்பின்னரே, தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
''மாற்றுத்திறனாளிகளை வேதனைப்படுத்தும் போக்கு குறித்து தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும் அதிகாரிகள் 'திருந்துவதாக' இல்லை என்பதைத்தான் இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது'' என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.