/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோடெல்லாம் பள்ளம் பதறுது மக்கள் உள்ளம்! நகராட்சிக்கு 'நற்சான்று' கொடுக்கலாம்! ரோடெல்லாம் பள்ளம் பதறுது மக்கள் உள்ளம்! நகராட்சிக்கு 'நற்சான்று' கொடுக்கலாம்!
ரோடெல்லாம் பள்ளம் பதறுது மக்கள் உள்ளம்! நகராட்சிக்கு 'நற்சான்று' கொடுக்கலாம்!
ரோடெல்லாம் பள்ளம் பதறுது மக்கள் உள்ளம்! நகராட்சிக்கு 'நற்சான்று' கொடுக்கலாம்!
ரோடெல்லாம் பள்ளம் பதறுது மக்கள் உள்ளம்! நகராட்சிக்கு 'நற்சான்று' கொடுக்கலாம்!
ADDED : ஜூன் 28, 2024 11:41 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், ரோடுகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறி விபத்துகளை ஏற்படுத்தும் மையமாக மாறியுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
பொள்ளாச்சி நகராட்சி, பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி, தாளக்கரை கிராமத்தின் ஒரு பகுதியான வடுகபாளையம் ஆகிய மூன்று வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாகும். மொத்தம், 13.87 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது.
நகராட்சியில் மொத்தம், 147.78 கி.மீ.,க்கு ரோடுகள் உள்ளன. நகராட்சி எல்லைக்குள், 11.50 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையினராலும், 5 கி.மீ., நீளமுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் மூலமாகவும் பராமரிக்கப்படுகிறது. நகராட்சியில் பராமரிக்கப்படும் ரோடுகள் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து விபத்துகள் ஏற்படுத்தும் மையமாக மாறியுள்ளது.
பொத்தலாக மாறியது
டி.கோட்டாம்பட்டி மதுரைவீரன் கோவில் அருகே செல்லும் ரோடு குண்டும், குழியுமாக மாறியுள்ளது. கற்கள் நிறைந்த ரோட்டில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகியுள்ளது.
இந்த ரோட்டை கடக்க மக்கள் படாதபாடு படுகின்றனர். இதை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பொள்ளாச்சி கந்தசாமி பூங்கா ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, தெப்பக்குளம் வீதி வழியாக தினமும், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
அதில், கந்தசாமி ரோடு - பத்ரகாளியம்மன் கோவில் ரோடு சந்திப்பு பகுதி அருகே மெகா பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
பள்ளத்தில் இறங்கும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. மேலும், கவனமின்றி வருவோர் விபத்துக்குள்ளாவது தொடர்கிறது. மழை காலங்களில் மழைநீர் முழுவதுமாக தேங்கி நிற்பதால் குழி இருப்பதை உணராமல், வாகனங்களில் வருவோர் கீழே விழுகின்றனர்.
தெப்பக்குளம் அருகே குடிநீர் குழாய் சீரமைப்புக்காக தோண்டப்பட்ட ரோடு மூடப்பட்டாலும், மேடாக காட்சியளிக்கிறது. மேட்டில் ஏறி வாகனங்கள் செல்லும் போது சரிந்து விழும் நிலை உள்ளது. ரோடு மோசமாக உள்ளதால் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. இதனால், நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில், நகராட்சி வரி மையம் அருகே ரோட்டின் நடுவே நீளமாக பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். அன்சாரி வீதி ரோட்டில் தொடர் மழையால், தார் ரோடு உள்வாங்கி பள்ளமாக மாறி விபத்துக்கு அச்சாரம் போடுகிறது.
நகரில் மோசமான ரோடுகளை பட்டியலிட்டு போட்டுக்கொண்டே செல்லும் அளவுக்கு ஆங்காங்கே பள்ளமும், மேடாகவும் மாறி வாகன ஓட்டுநர்களை இம்சைப்படுத்துகின்றன.
பயிற்சி எடுக்கணும்!
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரில், ரோடுகளில் எப்படி வாகனம் ஓட்ட வேண்டும் என்பதற்கு தனியாக பயிற்சி எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எங்கு பள்ளம் உள்ளது; எங்கு குழியுள்ளது என்பது தெரியாமல் சென்று விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகியுள்ளது.
நகரில் பல இடங்களில் ரோடுகள் எல்லாம் மோசமாகி, விபத்துகளை ஏற்படுத்தினாலும் சீரமைக்க நடவடிக்கை இல்லை.
ரோடுகளில், 'பேட்ச் ஒர்க்' என்ற பெயரில், பெயரளவுக்கு தற்காலிக தீர்வு மட்டுமே காணப்படுகின்றன. முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் ரோடுகளில் சாகச பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
பள்ளம் இருப்பதை கவனித்து திருப்பும் போது, மற்ற வாகனங்களின் மீது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் வாகன ஓட்டுநர்களின் பாடு திண்டாட்டமாக மாறியுள்ளது. ரோடுகள் பள்ளமாக உள்ளதால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கந்தசாமி பூங்கா அருகே உள்ள பாலத்தின் ஒரு பக்க சுவர் சேதமடைந்துள்ளது. மரப்பேட்டை நுாலகம் அருகே தரை மட்ட பாலத்தையொட்டி ரோடு திரும்பும் பகுதியில் குழியாக இருப்பதால் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது.
நகராட்சியில் வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் கூறி, வரி வசூலில் மட்டும் கெடுபிடி காட்டும் அதிகாரிகள், ரோட்டை சீரமைக்க எவ்வித அக்கறையும் காட்டாதது வேதனையாக உள்ளது.
இதுபோன்று பராமரிப்பில்லாத ரோடுகள் குறித்து கணக்கெடுப்பு செய்து, அவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தற்காலிகமாக பொதுநிதியில், சேதமடைந்த ரோடுகளில் 'பேட்ச் ஒர்க்' செய்யப்படும். அரசிடம் சிறப்பு நிதி பெற்று, சேதமடைந்த ரோடுகள் முழுமையாக புதுப்பிக்கப்படும்,' என்றனர்.