ADDED : ஜூலை 17, 2024 12:22 AM

மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் சாமன்னா நீரேற்று நிலையத்தில், உள்ள உறிஞ்சி கிணற்றில் சேறு புகுந்தது. இதை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றிலிருந்து தினசரி சுமார் 14 எம்.எல்.டி. வரை தண்ணீர் எடுத்து, சாமன்னா தலைமை நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
பில்லுார் அணை நிரம்பி, பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாமன்னா நீரேற்று நிலையத்தில் உள்ள உறிஞ்சி கிணற்றில் சேறு புகுந்தது. இதனால், தண்ணீர் எடுக்க முடியவில்லை.
தற்போது சேறு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள சில பகுதிகளுக்கு இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் தடைபடும் அபாயம் உள்ளது.
இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''உறிஞ்சி கிணற்றில் உள்ள சேறு அகற்றும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் சேறு முழுமையாக அகற்றப்படும். பிறகு தான், குடிநீர் விநியோகத்திற்கு தண்ணீர் எடுக்க முடியும்,'' என்றனர்.