/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாலாங்குளம் பைபாஸில் இறங்கு தளம் கட்டுமானம் துவக்கம்! சுரங்கப்பாலம் வழியாக வாகனங்கள் இயக்கம் வாலாங்குளம் பைபாஸில் இறங்கு தளம் கட்டுமானம் துவக்கம்! சுரங்கப்பாலம் வழியாக வாகனங்கள் இயக்கம்
வாலாங்குளம் பைபாஸில் இறங்கு தளம் கட்டுமானம் துவக்கம்! சுரங்கப்பாலம் வழியாக வாகனங்கள் இயக்கம்
வாலாங்குளம் பைபாஸில் இறங்கு தளம் கட்டுமானம் துவக்கம்! சுரங்கப்பாலம் வழியாக வாகனங்கள் இயக்கம்
வாலாங்குளம் பைபாஸில் இறங்கு தளம் கட்டுமானம் துவக்கம்! சுரங்கப்பாலம் வழியாக வாகனங்கள் இயக்கம்
ADDED : ஜூன் 27, 2024 10:17 PM

கோவை : உக்கடம் - ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலத்தில், சுங்கம் செல்வதற்கு வாலாங்குளம் பைபாஸில் இறங்கு தளம் கட்டும் பணி நேற்று துவங்கியது. அதனால், சுரங்கப் பாலம் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலப் பணி இரண்டு கட்டமாக, மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம், 3.85 கி.மீ., மேம்பாலம் கட்டப்படுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் கட்டுமான பணி துவங்கியது. ஆக்கிரமிப்பு அகற்றம், நிலம் கையகப்படுத்துதல், உயர்கோபுர மின் பாதையை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியிருந்தது. போக்குவரத்துக்கு இடையே மேம்பாலப் பணி நடந்ததால், ஆமை வேகத்தில் நகர்ந்தது. ஒரு வேளையாக, 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன.
பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோடுகளில் இருந்து வருவோர் உக்கடம் சந்திப்பை அடையலாம். இதேபோல், உக்கடத்தில் இருந்து இவ்விரு ரோடுகளுக்கும் செல்லலாம். ஆனால், சுங்கம் சந்திப்புக்குச் செல்ல வாலாங்குளம் பைபாஸில் இறங்கு தளம் அமைக்கும் பணி தற்போது தான் துவங்கியுள்ளது.
முதல்கட்டமாக, அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டடங்கள் இடிக்கப்பட்டு, உக்கடத்தில் இருந்து வரும் வாகனங்கள், சுரங்கப் பாலம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இறங்கு தளத்துக்கு அடித்தள கான்கிரீட் தளம் போடும் பணி நேற்று துவக்கப்பட்டது. இப்பணியை ஜூலை மாதத்துக்குள் முடிக்க, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் இலக்கு நிர்ணயித்திருக்கின்றனர்.
மேம்பாலத்தின் மற்ற பகுதிகளில் வேலை முடிந்து விட்டதால், இம்மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதனால், வர்ணம் பூசும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆத்துப்பாலம் சந்திப்பு பகுதியில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தில் ரோடு புதுப்பித்து, இருபுறமும் கைப்பிடிச்சுவர் கட்டுதல் மற்றும் விடுபட்ட இடங்களில் மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால், மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தபின், இப்பணிகளை செய்ய, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், ஆத்துப்பாலம் சந்திப்பு பகுதியில் மேம்படுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஏராளமான வாகனங்கள் வரும்; அதேநேரம், தரை மார்க்கமாகவும் வாகனங்கள் வரும். போத்தனுார் ரோடு மற்றும் சுந்தராபுரம் ரோட்டில் இருந்தும் வாகனங்கள் வரும். அதனால், குறிச்சி பிரிவு சந்திப்பை மேம்படுத்த வேண்டும். அப்பகுதியில் வாகனங்கள் தேங்காமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.