/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பில் தொகை தராமல் கோப்புகள் நிறுத்திவைப்பு பில் தொகை தராமல் கோப்புகள் நிறுத்திவைப்பு
பில் தொகை தராமல் கோப்புகள் நிறுத்திவைப்பு
பில் தொகை தராமல் கோப்புகள் நிறுத்திவைப்பு
பில் தொகை தராமல் கோப்புகள் நிறுத்திவைப்பு
ADDED : ஜூன் 27, 2024 10:13 PM
கோவை : கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்கு பணம் விடுவிக்காமல், கோப்புகளை நிறுத்தி வைத்திருப்பதால், ஒப்பந்ததாரர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் செய்ய இ-டெண்டர் முறை அமலில் இருந்தாலும் கூட, குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் வழங்கினால் மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பல தரப்புக்கும் கமிஷன் கொடுத்தாலும் அதற்கான தொகை குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
லோக்சபா தேர்தலுக்கு முன், அவசரப் பணி என்ற அடிப்படையில், முன்அனுமதி பெற்று கொடுக்கப்பட்ட பல்வேறு வேலைகள் செய்து முடிக்கப்பட்டு, பில்கள் சமர்ப்பிக்கப்பட்டு, இரு மாதங்களுக்கு மேலாகி விட்டது. மாநகராட்சி வசம் நிதி இருந்தும் ஒப்பந்ததாரர்களுக்கான தொகை விடுவிக்கப்படாமல், கோப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
இதுதொடர்பாக, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் நேரத்தில், மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தியை போக்குவதற்காக, முன்அனுமதி பெற்று, அவசரப் பணி என்று கூறி, சில வேலைகள் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இரவு - பகலாக தொழிலாளர்களை நியமித்து, வேலையை செய்து கொடுத்தோம். அதற்கான தொகை இன்னும் விடுவிக்கப்படவில்லை.
மாநகராட்சி கணக்கு பிரிவில் கேட்டால், மேயர் அலுவலகத்தில் கோப்புகள் நிலுவையில் இருப்பதாக கூறுகின்றனர். கோப்புகளில் மேயர் கையெழுத்து இல்லாமல், பணம் விடுவிக்க மாட்டார்கள். கோப்புகள் தேக்கம் தொடர்பாக, கமிஷனர் அலுவலகத்தில் இருந்தும், மேயர் அலுவலகத்துக்கு நினைவூட்டல் செய்யப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும், 60க்கும் மேற்பட்ட கோப்புகள் இன்னும் கையெழுத்தாகாததால், பணம் விடுவிக்காமல் இருக்கின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.