/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விபத்தில்லா கோவை; 'உயிர்' சார்பில் மனித சங்கிலி: கைகோர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லுாரி மாணவ, மாணவியர் விபத்தில்லா கோவை; 'உயிர்' சார்பில் மனித சங்கிலி: கைகோர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லுாரி மாணவ, மாணவியர்
விபத்தில்லா கோவை; 'உயிர்' சார்பில் மனித சங்கிலி: கைகோர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லுாரி மாணவ, மாணவியர்
விபத்தில்லா கோவை; 'உயிர்' சார்பில் மனித சங்கிலி: கைகோர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லுாரி மாணவ, மாணவியர்
விபத்தில்லா கோவை; 'உயிர்' சார்பில் மனித சங்கிலி: கைகோர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லுாரி மாணவ, மாணவியர்
ADDED : செப் 26, 2025 06:56 AM

கோவை; 'விபத்தில்லா கோவை' இயக்கத்தின் ஒரு பகுதியாக, 'உயிர்' அறக்கட்டளை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில், கோவையில் நேற்று ஒரே நாளில், நான்கு சாலைகளில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.
'உயிர்' அமைப்பு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில், 'நான் உயிர்க் காவலன்' என்ற விழிப்புணர்வு பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அக். 6 முதல் ஒரு வாரத்துக்கு 'விபத்தில்லா கோவை' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்ற மனித சங்கிலியின் துவக்க நிகழ்வு, அவிநாசி சாலையில் உள்ள அண்ணாதுரை சிலை அருகே நடந்தது.
கலெக்டர் பவன்குமார், நிகழ்வைத் துவக்கி வைத்து பேசுகையில், “அக்., 6 முதல் 12 வரை கோவையில் விபத்தில்லா வாரம் கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னோடி நிகழ்வாக, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மனித சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என, 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சாலைப்பாதுகாப்பில், கோவை மாவட்டம், கோவை மாநகரை முன்மாதிரியாக மாற்றும் திட்டத்தில் இது முக்கியமான முன்னெடுப்பாகும்,” என்றார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், 'உயிர்' அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன், போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார், இந்திய தொழில் வர்த்தகசபை துணை தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், பொள்ளாச்சி சாலையில் ரத்தினம் கல்லுாரி முதல் ஈச்சனாரி வரை, பை-பாஸ் சாலை சந்திப்பு முதல் மலுமிச்சம்பட்டி நான்கு சாலை சந்திப்புக்கு அப்பால், 150 மீட்டர் தொலைவு வரை, ரத்தினம், கற்பகம், அங்கப்பா, ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம், ஈஸ்வர் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கைகோர்த்து நின்றனர். 'நான் உயிர் காவலன்', 'வாகனம் ஓட்டும்போது மொபைல்போன் உபயோகிக்காதீர்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கை கோர்த்து நின்றனர். சுந்தராபுரம் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குனியமுத்துார் பஸ் ஸ்டாப் முதல் கோவைபுதுார் பிரிவு வரை கிருஷ்ணா, வி.எல்.பி., ஜானகியம்மாள், நேரு ஏரோநாட்டிக்கல், கிருஷ்ணம்மாள் மற்றும் அரசு கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
குனியமுத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல், ரேஸ்கோர்ஸ் சாலையிலும் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.