Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழ்க்கையின் எல்லா விதிகளையும் ஏ.ஐ. மாற்றும்: 'உருமாறும் இந்தியா' மாநாட்டில் மாணவர்களுக்கு விளக்கம்

வாழ்க்கையின் எல்லா விதிகளையும் ஏ.ஐ. மாற்றும்: 'உருமாறும் இந்தியா' மாநாட்டில் மாணவர்களுக்கு விளக்கம்

வாழ்க்கையின் எல்லா விதிகளையும் ஏ.ஐ. மாற்றும்: 'உருமாறும் இந்தியா' மாநாட்டில் மாணவர்களுக்கு விளக்கம்

வாழ்க்கையின் எல்லா விதிகளையும் ஏ.ஐ. மாற்றும்: 'உருமாறும் இந்தியா' மாநாட்டில் மாணவர்களுக்கு விளக்கம்

ADDED : செப் 01, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
கோவை: கோவை எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில், 'உருமாறும் இந்தியா மாநாடு - 2025' நேற்று துவங்கியது.

முதல் நாளான நேற்று, எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை வரவேற்று பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவு கற்பனைத்திறனை வளர்க்கவும், புத்தாக்கங்களுக்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது. தொழில்துறையில் வளர்ச்சிக்கான முன்னேற்றங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பெரும் பங்களிக்கிறது,'' என்றார்.

ஏசியன் பெயின்ட்ஸ் கோ புரோமோட்டர் ஜலஜ் தானி: ஏ.ஐ., பயன்படுத்துவது, எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமையும். விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த, ரோபோக்கள், ஏ.ஐ. பயன்படுத்தப்படுகின்றன.

டென்னிஸ் வீரருக்கு, குறிப்பிட்ட கோணத்திலும், வேகத்திலும் பந்துகளை சுழற்றும் ரோபோக்களை பயன்படுத்தி, பயிற்சி அளிக்கலாம். இது, வீரரின் துல்லியத்தை மேம்படுத்தும். விளையாட்டு வீரர்களின் உடல்நலத்தை கண்காணித்து, எப்போது ஓய்வு எடுக்க வேண்டும், எவ்வளவு வேகமாக ஓட வேண்டும் போன்றவற்றை இக்கருவிகள் வழியே அறியலாம்.

உடலில் அணியக்கூடிய சாதனங்கள் இதயத்துடிப்பு உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிப்பதோடு, ஆரோக்கியம் குறித்து சிறந்த தகவலை பெற முடியும். மருத்துவர் ஒரு நபரின் ஆரோக்கியம் குறித்து சிறப்பாக ஆலோசனை வழங்க முடியும்.

'வெப்வேதா' நிறுவனர் அங்கூர் வாரிக்கூ: ஏ.ஐ. சமீ பகாலமாக அதிகளவில் பரவலாகி, மக்கள் பயன்பாட்டில் பிரபலமாகியுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இதன் ஆதிக்கம் தொடரும். ஏ.ஐ.யால் ஒரு உள்ளடக்கத்தை நேர்த்தியாக உருவாக்க முடியும். மனிதனால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தின் தன்மையை, ஏ.ஐ.யால் கொடுக்க முடியாது.

எதிர்காலத்தில், மருத்துவ வளர்ச்சி காரணமாக, 150 முதல் 200 ஆண்டுகள் வரை மனிதன் வாழக்கூடும். இது, தற்போதைய வாழ்க்கையின் எல்லா விதிகளையும் மாற்றும்.

இந்திய கலைஞர் ஹர்ஷித் அகர்வால்: இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி, கலைஞர்களுக்கு புதிய ஊடகமாக மாறியுள்ளது. தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு, பல்வேறு கலை படைப்புகள் உருவாகின்றன. ஒரு ட்ரோனுடன் பேனாவை இணைத்து, மனிதர்களின் கை அசைவுகளை பதிவு செய்து கேன்வாஸில் வரையலாம். இது, மனிதர்களின் உடல் இயக்கங்களை தொழில்நுட்பம் மூலம் கலை வடிவமாக மாற்றும் ஒரு முயற்சி. இது, தொழில்நுட்பத்தை ஒரு புதிய படைப்புக் கருவியாகப் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுகிறது.

தொழில்முனைவர் ராகுல் ஜான் ஆஜு: பெற்றோர், ஆசிரியர்கள் அனுபவங்கள் என பல வழிகளில் நம் அறிவு வளர்கிறது. நமக்கு கிடைக்கும் அனுபவங்கள், தகவல்கள் மிகப்பெரியவை. ஏ.ஐ.க்கு கொடுக்கும் தகவல்களே அதன் அறிவு. எவ்வளவு தரவுகளைக் கொடுத்தாலும், மனிதர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களோடு ஒப்பிடும்போது, அது குறைவு. அனுபவம் மற்றும் படைப்பாற்றல் மிகவும் தனித்துவமானது. செயற்கை நுண்ணறிவு எவ்வாறு சேவை செய்யும் என்பதை நமது ஆர்வமும், தேர்வும் தீர்மானிக்கின்றன.

திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்: ஒரு கதையை ஏ.ஐ. எழுத முடியாது. திரைப்படங்களில் தொழில்நுட்ப உதவியாக இருக்கிறது. நேரம் மிச்சமாகிறது. கலைஞர் தேர்வு, ஸ்டோரி போர்டு போன்றவற்றிலும் உதவும். வேலை வாய்ப்புக்கு பாதிப்பு இல்லை. ஓ.டி.டி. குறித்து முதலில் நடிகர் கமல்ஹாசன் பேசியபோது, நாம் ஏற்கவில்லை. இன்று எல்லாம் ஓ.டி.டி.-யில் வெளிவருகிறது. அதுபோலவே, புதிய தொழில்நுட்பத்தை ஏற்க வேண்டும்.

நிகழ்ச்சியில்,கல்வி நிறுவனங்களின் செயலாளர் மோகன்தாஸ், இயக்குனர்கள் ஸ்ரீஷா, நித்தின் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாநாடு நாளை நிறைவடைகிறது.

'ரஜினியின் குரல் ஏ.ஐ. தொழில்நுட்பம்'


திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ''வரும் காலங்களில் திரைப்படங்களில் ஏ.ஐ. ஆதிக்கம் இருக்கும் என்பதை விட, அதன் உதவி இருக்கும். அதுவொரு தொழில்நுட்பம் என்பதால், அறிவை பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். எந்தவொரு தொழில்நுட்பமும் முதலில் வரும்போது, வெளியே இருந்து பார்ப்போம். பின், பழகி விடுவோம். எப்படி பயன்படுத்துவது என்பது நம் கையில் இருக்கிறது. கூலி படத்தில் ரஜினியின் குரல், ஏ.ஐ. தொழில்நுட்பம். அதுபோல், ஏ.ஐ. பயன்படுத்திக் கொள்வேன். இசைக்கு அனிருத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். ஏ.ஐ., பயன்படுத்த தேவையில்லை; அறிவை பயன்படுத்திக் கொள்கிறேன்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us