/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ யானையிடம் நூலிழையில் தப்பிய மூதாட்டி, பேத்தி யானையிடம் நூலிழையில் தப்பிய மூதாட்டி, பேத்தி
யானையிடம் நூலிழையில் தப்பிய மூதாட்டி, பேத்தி
யானையிடம் நூலிழையில் தப்பிய மூதாட்டி, பேத்தி
யானையிடம் நூலிழையில் தப்பிய மூதாட்டி, பேத்தி
ADDED : மே 27, 2025 12:15 AM

தொண்டாமுத்தூர்; நல்லூர்பதியில், அதிகாலையில், ஒற்றைக்காட்டு யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியதில் மூதாட்டி மற்றும் பேத்தி, நூலிழையில் உயிர்தப்பினர்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட நல்லூர்பதியில், நேற்றுமுன்தினம் இரவு, வனப்பகுதியைவிட்டு ஒற்றை காட்டு யானை வெளியேறியது. தோட்டங்களுக்குள் சுற்றிவிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டியுள்ள நல்லூர்பதி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனைக்கண்ட ஊர் மக்கள் கூச்சலிட துவங்கினர். அப்போது, யானை, குஞ்சம்மாள்,65 என்பவரின் வீட்டின் பின்புறம் நின்றுகொண்டிருந்தது.
வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த குஞ்சம்மாள் மற்றும் அவரது பேத்தியை, அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு அழைத்தனர்.
குஞ்சம்மாள் மட்டும் வீட்டின் வெளியே வந்து, என்ன கூச்சல் என்று பார்த்து கொண்டிருந்தபோது, யானை வேகமாக முன்னே வரத்துவங்கியது. இதனைக்கண்டு, குஞ்சம்மாள் அருகிலிருந்த வீட்டிற்குள் ஓடினார். வேகமாக வந்த யானை, குஞ்சம்மாளின் வீட்டின் முன்புற கூரையை, ஆக்ரோஷமாக இடித்தது. சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தது.
தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். வீட்டின் முன்பகுதி மட்டும் இடிந்ததால், வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பேத்தி உயிர் தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.