ADDED : பிப் 01, 2024 11:11 PM

கோவை:பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் கோவை மாணவி தமிழிசைக்கு 'கலையரசி' பட்டம் வழங்கப்பட்டது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது ஒன்றியம், மாவட்டம், மண்டலம், மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த கல்வி ஆண்டுக்கான போட்டிகள் கடந்த 2023 அக்., மாதம் முதல் நடந்து வருகிறது. மாநில அளவில் இறுதிப் போட்டிகள் கடந்த டிச., மாதம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அளவில் தேர்வு பெற்ற மாணவர்கள் பங்கேற்று தனித்திறன்களை வெளிப்படுத்தினர். நாடகம், கதை ஒப்புவிப்பு, கவிதை, சிற்பம் வடிவமைப்பு, ஓவியம் என பல பிரிவுகளில் வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா டிச., 30ம் தேதி சென்னையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்தது. இதில் கோவை ஷாஜகான் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி தமிழிசை 'கலையரசி' பட்டத்தை வென்றார். இவர், ஆங்கிலத்தில் கதை எழுதுதல், நாடகம், பறை இசை ஆகிய மூன்று பிரிவுகளில் பரிசுகளை வென்று இருந்தார். மேலும், ஒன்றியம், மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் அதிக பரிசை பெற்றதால், இப்பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இவரை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் சக ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்


