Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நுண்ணுாட்ட சத்துப் பொருட்கள் பற்றி விழிப்புணர்வு:உணவு பாதுகாப்பு துறையினர் பிரசாரம்

நுண்ணுாட்ட சத்துப் பொருட்கள் பற்றி விழிப்புணர்வு:உணவு பாதுகாப்பு துறையினர் பிரசாரம்

நுண்ணுாட்ட சத்துப் பொருட்கள் பற்றி விழிப்புணர்வு:உணவு பாதுகாப்பு துறையினர் பிரசாரம்

நுண்ணுாட்ட சத்துப் பொருட்கள் பற்றி விழிப்புணர்வு:உணவு பாதுகாப்பு துறையினர் பிரசாரம்

ADDED : அக் 20, 2025 10:00 PM


Google News
சூலூர்: துரித உணவுகளை தவிர்த்து நுண்ணூட்ட சத்துக்கள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்துமாறு, உணவு பாதுகாப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நமது உடலுக்கு ஏற்ற, போதுமான சத்துக்கள் உள்ள உணவு பொருட்களை தேவையான அளவு உண்பதே ஆரோக்கியமான உணவு ஆகும். ஆனால், ஆரோக்கியத்தை தரும் உணவு பொருட்களிலும் தேவையற்ற கலப்படங்கள் நடப்பதால், சத்துக்குறைபாடு ஏற்பட்டு உடல் பலவீனம் அடைகிறது.

வாய்க்கு ருசியாக இருக்கிறது என்பதால், பலரும் துரித உணவுகளுக்கு அடிமையாகி உடலை கெடுத்துக்கொள்கின்றனர். அந்த துரித உணவுகளில் உடலுக்குக்கு கேடு விளைவிக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதால், இளம் வயதிலேயே பலரும் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதில், ரத்த சோகை எனும் நுண்ணூட்ட சத்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பு பெரும்பாலானோருக்கு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

செறிவூட்டும் திட்டம் சத்து குறைபாட்டை போக்கும் வகையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, உப்பு, பால், கோதுமை மாவு, சமையல் எண்ணெய் ஆகியவற்றில் நுண்ணூட்ட சத்துக்களை பாதுகாப்பான முறையில் சேர்ப்பதே செறிவூட்டுதல் ஆகும். இதற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

மக்களிடையே பிரசாரம் செறிவூட்டப்பட்ட அரிசி, உப்பு, எண்ணெய் வகைகளை பயன்படுத்த, உணவு பாதுகாப்பு துறையினர் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

செறிவூட்டப்பட்ட உணவு என்பது இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்ற முக்கியமான சத்துக்கள், உணவு பொருட்களில் சேர்ப்பதுதான். அதனால், அச்சப்படத்தேவையில்லை. அவற்றை உண்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் மக்களிடத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையினர் கூறியதாவது:

இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களில் இல்லாத அல்லது குறைவாக உள்ள நுண்ணூட்ட சத்துக்களை, செயற்கையாக அந்த உணவுகளில் சேர்ப்பதுதான் செறிவூட்டப்பட்ட உணவாகும்.

செறிவூட்டப்பட்ட உணவு பொருள் என்பதை கண்டறிய, அந்த பாக்கெட்டில் 'பிளஸ் எப்' எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்த பொருளில் என்னென்ன நுண்ணூட்ட சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் தேவையான நுண்ணூட்ட சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும் என்பதால், மக்கள் அனைவரும் தயக்கம் இன்றி வாங்கி பயன்படுத்தலாம். மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஊட்டச் சத்துள்ள உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் கலப்படம் இல்லாத செறிவூட்டப்பட்ட உணவுகள் குறித்தும் விளக்குகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us