ADDED : செப் 26, 2025 05:21 AM
பொள்ளாச்சி; பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கண்டறிந்து அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகரில், பொது இடங்களில், அரசியல் கட்சி பொதுக்கூட்டம், வர்த்தகம் என பல்வேறு வகைகளில் விளம்பர பதாகைகள், நிரந்தர விளம்பரப் பலகைகள் வைக்கப்படுகின்றன. ஐந்து நாட்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டாலும், சிலர், விளம்பர பலகைகளை அகற்றாமல் உள்ளனர்.
சுற்றுப்பகுதி பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளிலும், விதிகளைப் புறக்கணித்து, அனுமதியின்றி ஆங்காங்கே பெரிய அளவிலான விளம்பர பலகைகள், போக்குவரத்துக்கு இடையூறாகவே வைக்கப்படுகின்றன.
மக்கள் கூறுகையில், 'கிராம சாலைகளில் அனுமதியின்றி ஆபத்தான முறையில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை கண்டறிந்து, அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும்,' என்றனர்.