Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையை கலங்கடிக்கும் தங்க கட்டி மோசடி!

கோவையை கலங்கடிக்கும் தங்க கட்டி மோசடி!

கோவையை கலங்கடிக்கும் தங்க கட்டி மோசடி!

கோவையை கலங்கடிக்கும் தங்க கட்டி மோசடி!

ADDED : ஜன 28, 2024 02:03 AM


Google News
கோவையில் ஒரு காலத்தில், வெறும் வயல்களாகவும், தோட்டங்களாகவும் இருந்த நிலங்கள், இப்போது 1 சென்ட் பல லட்சம் ரூபாய் அளவுக்கு மதிப்பு உயர்ந்துள்ளதால், சாதாரண விவசாயிகளும் பல கோடிகளுக்கு அதிபதியாகி உள்ளனர்.

பெரும்பாலும் இந்த நிலங்கள் கருப்பு பணத்தில் கைமாறுவதால், அந்த பணத்தை எப்படி முதலீடு செய்வது என்பது தெரியாமல், பலரும் தவறான வழிகளை கையாள்கின்றனர்.

ஏமாற்றம்


வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பண மோசடி, கோவையில் நடப்பதற்கும் இவர்களே அடித்தளமாக உள்ளனர். தேக்கு மரம், ஈமு கோழி வளர்ப்பு துவங்கி, ஆன்லைன் மோசடிகள் வரை இங்கே அதிகளவு அரங்கேறி உள்ளன.

ஒவ்வொரு நுாதன மோசடிகளிலும், பல நுாறு கோடிகளை பலரும் ஏமாற்றிச் சென்றாலும், மீண்டும் மீண்டும் இங்கே புதுப்புது மோசடிகள் முளைக்கின்றன. இந்த வரிசையில், சமீபத்தில் தங்கக்கட்டி வாங்கித் தருவதாக மோசடி நடந்து உள்ளது.

இதில், 87 லட்சம் ரூபாய் மோசடி புகாரில், மதன்லால்பாப்னா, ஜிதேந்திரா பாப்னா ஆகிய இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஒரு நாளுக்கு, 200 கிலோ தங்க நகை வர்த்தகம் கோவையில் நடக்கிறது.

இதனால், இத்தொழிலில் முதலீடு செய்ய யாரும் தயங்கு வதில்லை என்பதை வைத்து, இந்த மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது, 1 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகைக்கு மோசடி நடந்துள்ளதாக தான் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வாறு தங்கக்கட்டி வாங்கித் தருவதாக கூறி, வி.ஐ.பி.,க்கள், தொழிலதிபர்கள் என பலரிடமும், பல கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருப்பதாகவும், அதில் பெருமளவு கருப்புப் பணம் என்பதால், புகார் வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்துறையில் மிக முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு பெண் அதிகாரியின் சகோதரியும், தங்கக்கட்டி வாங்கித் தருவதாக மோசடி செய்வோரிடம், பல கோடி ரூபாய் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

புகார் இல்லாமலே, இத்தகைய வி.ஐ.பி.,க்களின் பணத்தை வாங்கித் தர முயற்சி நடப்பதாகவும், போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விழிப்புணர்வு


இதுபோல, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே மோசடிக்காரர்களிடமிருந்து பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது. மற்றவர்கள், அந்த பணத்தை திரும்ப வாங்குவது குதிரை கொம்பான விஷயமாக இருக்கும்.

அதற்கு, பெருமளவு பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதோடு, ஆண்டு கணக்கில் அலைய வேண்டியிருக்கும் என்பதும் நிச்சயம். அதனால், பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருப்பது மட்டுமே, இப்போதைக்கு இதற்கான ஒரே தீர்வு

- நமது சிறப்பு நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us