Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆன்லைனில் உரமா, வேண்டவே வேண்டாம்; விவசாயிகளை எச்சரிக்கிறது வேளாண் துறை

ஆன்லைனில் உரமா, வேண்டவே வேண்டாம்; விவசாயிகளை எச்சரிக்கிறது வேளாண் துறை

ஆன்லைனில் உரமா, வேண்டவே வேண்டாம்; விவசாயிகளை எச்சரிக்கிறது வேளாண் துறை

ஆன்லைனில் உரமா, வேண்டவே வேண்டாம்; விவசாயிகளை எச்சரிக்கிறது வேளாண் துறை

ADDED : மார் 17, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
கோவை; விவசாய நிலத்துக்கு நேரடியாக கொண்டு வந்து ஏஜென்டுகள் விற்பனை செய்யும் உரம் மற்றும் ஆன்லைன் வாயிலாக உரங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என, வேளாண் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:

ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்களை ஆன்லைன் வாயிலாகவோ அல்லது தோட்டங்களுக்கு நேரடியாக வந்து விற்பனை செய்யும் ஏஜென்டுகளிடம், வேளாண் துறையால் வழங்கப்படும் உர உரிமம் கிடையாது. எனவே, இம்மாதிரியான விலை உயர்ந்த உரங்களை வாங்கிப் பயன்படுத்துவதால், சாகுபடிச் செலவு அதிகமாவதுடன், மகசூல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

விவசாயிகள், நகர்ப்புற மாடித்தோட்ட காய்கறி உற்பத்தியாளர்கள், ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வேளாண் துறையிடம் இருந்து உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் வாயிலாக, ரசாயன மற்றும் இயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

உர விற்பனை நிலையங்களில், உர ஆய்வாளர்கள் தரத்தை பரிசோதித்து, அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள், வட்டார வேளாண்மை விரிவாக்கமையங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான உயிர் உரங்கள் நுண்ணூட்ட உரங்களை வாங்கி, பயன்படுத்திக் கொள்ளலாம்.

தரமற்ற, போலியான உரங்களை விவசாயிகளின் தோட்டத்தில் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் விற்பனை செய்யும், உரிமம் இல்லாத ஏஜென்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us