Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தோட்டக்கலைத்துறை விலைப்பட்டியல் சும்மா பேருக்கு! ஆண்டு முழுவதும் பயன்படுத்த உத்தேசம்

தோட்டக்கலைத்துறை விலைப்பட்டியல் சும்மா பேருக்கு! ஆண்டு முழுவதும் பயன்படுத்த உத்தேசம்

தோட்டக்கலைத்துறை விலைப்பட்டியல் சும்மா பேருக்கு! ஆண்டு முழுவதும் பயன்படுத்த உத்தேசம்

தோட்டக்கலைத்துறை விலைப்பட்டியல் சும்மா பேருக்கு! ஆண்டு முழுவதும் பயன்படுத்த உத்தேசம்

ADDED : மே 13, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
கோவை : தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில், செயல்படும் வாட்ஸ்ஆப் சேனலில் பகிரப்படும் சந்தை நிலவரம், பொத்தாம்பொதுவாக, கடமைக்கு விளைப்பொருட்களின் விலை குறிப்பிட்டு பகிரப்படுகிறது என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வாட்ஸ்அப் சேனல் ஒன்று கடந்த ஏப்., 14ம் தேதி உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான சந்தை நிலவரம், தொழில்நுட்பம், மானிய அறிவிப்புகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளிட்ட தகவல்கள் இதன் வாயிலாக பகிரப்படுகின்றன.

கடமைக்கு விலை


இதில் பகிரப்படும் விலை நிலவர அறிவிப்புகள், விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. உண்மையிலேயே மாநிலம் முழுமைக்குமான, வேளாண் விளைபொருட்களின் சந்தை நிலவரத்தை வெளியிடுவதற்குப் பதில், அதிகாரிகள் 'கடமை'க்கு இதைச் செய்வதாகவே தெரிகிறது.

ஏனெனில், இதில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை ஆண்டின் எந்தவொரு நாளிலும், பருவத்திலும் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு காய்கறியின் குறைந்தபட்ச விலையை மிகக் குறைவாகவும், அதிகபட்ச விலையை மிக அதிகமாகவும் குறிப்பிட்டுள்ளனர். எப்படியும் இந்த விலைக்குள்தான் விற்கும் என்ற அளவுக்கு, தோராயமாக கணக்கிட்டுள்ளனர்.

உதாரணமாக, கத்திரிக்காயின் விலை, கோவை உழவர் சந்தை நிலவரப்படி, ரூ.22 முதல் ரூ.30 வரை. ஆனால், தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள சந்தை நிலவரம் ரூ.12 முதல் ரூ.80 வரை.

பழங்களின் விலையிலும் இதே அளவுக்கு பெரும் மாறுதல்கள் இருக்கின்றன. வாழை போன்ற சில வகை பழங்களில் கூடுதல் ரகங்கள் இருக்கும் என்பதால், அவற்றில் இந்த விலை வேறுபாட்டைத்தவிர்க்க முடியாது. ஆனால், கோவையில் ரூ.20 - ரூ.25க்கு விற்பனையாகும் முலாம் பழத்தின் விலையை, ரூ.10 - ரூ.50 என தோட்டக்கலைத் துறை குறிப்பிட்டுள்ளது.

ஆண்டு முழுதும் எந்த ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும், அந்த விலைக்குள்தான் இருக்கும் எனும் அளவுக்கு, மிகத் தாராள இடைவெளியுடன், 'குத்துமதிப்பாக' கணக்கிட்டுள்ளனர்.

ஏமாளியாக்குகிறதா


திட்டத்தை அறிவித்துவிட்டோம் என்பதற்காக, பெயரளவுக்கு சந்தை நிலவரத்தை வெளியிட்டு, விவசாயிகளையும், மக்களையும் தோட்டக்கலைத்துறை ஏமாளியாக்கிக் கொண்டிருக்கிறதோ என கேட்கத்தோன்றுகிறது.

இத்தனைக்கும், உழவர் சந்தைகளில் தினசரி காய்கறி, பழங்களின் நிலவரம் வெளியிடப்படுகிறது. அந்த தரவுகளை வைத்துக் கொண்டாவது, விலை நிலவரத்தை தோட்டக்கலைத் துறை கணிக்கலாம்.

'தோட்டக்கலைத் துறை, கடமைக்கு வேலை செய்கிறது என்பதற்கு, இதைவிட உதாரணம் தேவையில்லை. பொத்தாம் பொதுவாக விலையைக் குறிப்பிட்டிருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

விளைபொருட்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை என மண்டல வாரியாக சந்தை மதிப்பைக் குறிப்பிட்டால், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

முதல்வர், அமைச்சர் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.Image 1417502





      Our Apps Available On




      Dinamalar

      Follow us