Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கயிறு இழுக்கும் போட்டியில்...கலெக்டருக்கு ஜே! ஊழியர்களுடன் சேர்ந்து கலகல!

கயிறு இழுக்கும் போட்டியில்...கலெக்டருக்கு ஜே! ஊழியர்களுடன் சேர்ந்து கலகல!

கயிறு இழுக்கும் போட்டியில்...கலெக்டருக்கு ஜே! ஊழியர்களுடன் சேர்ந்து கலகல!

கயிறு இழுக்கும் போட்டியில்...கலெக்டருக்கு ஜே! ஊழியர்களுடன் சேர்ந்து கலகல!

UPDATED : ஜன 13, 2024 02:35 AMADDED : ஜன 13, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
கோவை;தமிழர் திருநாளை முன்னிட்டு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கயிறு இழுக்கும் போட்டியில், கலெக்டர் அணி வெற்றி பெற்றது. ஊழியர்களுடன் சரிசமமாக அவர் ஜாலியாக பங்கேற்றதால், வளாகம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம், பொங்கி பிரவாகமெடுத்தது.

அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்று, பொங்கல் வைத்தனர். கோலப்போட்டியில் பெண் அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, சமுதாய சிந்தனையுடன் கோலம் வரைந்திருந்தனர்.

இவற்றை, கலெக்டர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., ஷர்மிளா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா உள்ளிட்டோர் மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கினர். பின், பொங்கல் வைத்து, சூரியனை வணங்கி, மாடு மற்றும் கன்றுகளுக்கு பொங்கல், பழம் வழங்கப்பட்டது.

அதன்பின், விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் வந்த கலெக்டர் கிராந்திகுமார், கர்ச்சிப்பால் தனது கண்களை கட்டிக் கொண்டு, உறியடி போட்டியில் பங்கேற்றார்.

முன்னெச்சரிக்கையாக, எத்தனை 'ஸ்டெப்' இருக்கிறது என நடந்து அளந்து சரியாக பானையை குறி வைத்து அடித்தார். பின், ஜமாப் அடிக்கப்பட்டது. அதன் இசைக்கேற்ப, கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்களும், ஆண் ஊழியர்களும் நடனமாடினர்.

உற்சாகமான கலெக்டரும், டி.ஆர்.ஓ.,வும் அவர்களுடன் இணைந்து நடனமாடினர். இவர்களது ஆர்வத்தை பார்த்த மற்ற அதிகாரிகளும் நடனம் ஆடினர். பின், கயிறு இழுக்கும் போட்டி நடத்தப்பட்டது. ஆண் ஊழியர்கள் கலெக்டர் தலைமையில் ஒரு பக்கமும், பெண் ஊழியர்கள் டி.ஆர்.ஓ., தலைமையில் இன்னொரு பக்கமும் நின்றனர். இரு பக்கமாக சரிசமமாக, தலா 50 ஊழியர்கள் நிற்க அறிவுறுத்தப்பட்டது. போட்டி ஆரம்பித்ததும் இரு புறமும், சமபலத்துடன் இழுத்தனர். இறுதியாக, கலெக்டர் அணி வெற்றி பெற்றது.

பொங்கல் விழா நினைவாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அனைத்து ஊழியர்களுக்கும், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us