/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிணத்துக்கடவு தாலுகாவாக அந்தஸ்து உயர்ந்தும் பலனில்லை! உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுமா?கிணத்துக்கடவு தாலுகாவாக அந்தஸ்து உயர்ந்தும் பலனில்லை! உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுமா?
கிணத்துக்கடவு தாலுகாவாக அந்தஸ்து உயர்ந்தும் பலனில்லை! உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுமா?
கிணத்துக்கடவு தாலுகாவாக அந்தஸ்து உயர்ந்தும் பலனில்லை! உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுமா?
கிணத்துக்கடவு தாலுகாவாக அந்தஸ்து உயர்ந்தும் பலனில்லை! உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுமா?
ADDED : மார் 21, 2025 10:23 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தாலுகா அந்தஸ்து பெற்றாலும், அனைத்து வசதிகளுடன் கூடிய தாலுகா அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம், கோர்ட் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
* 2012ம் ஆண்டு, பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக கிணத்துக்கடவு தாலுகா உருவாக்கப்பட்டது. அதன்பின், கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட்எதிரே, 2013ம் ஆண்டில், 2.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டும் பணி துவங்கப்பட்டது.
ஆனால், கோவில் இடத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதன்பின், இந்த கட்டடத்தை கோவை மாவட்ட கலெக்டர்களாக இருந்த, சமீரன் மற்றும் கிராந்திகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். தற்போது தாலுகா அலுவலகம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
* கிணத்துக்கடவு பகுதி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பின், போலீஸ் ஸ்டேஷன் நிர்வாகம், குற்றங்கள் தடுப்பு, விசாரணை, போலீஸ் மற்றும் அதிகாரிகளின் பணிகளை மேற்பார்வையிடுதல் போன்றவைகளுக்கு, இங்கு டி.எஸ்.பி., அலுவலகம் இல்லை.
பல ஆண்டுகளாக இங்கு டி.எஸ்.பி.,அலுவலகம் கொண்டு வர வேண்டும் என, முயற்சி எடுத்தும் தற்போது வரை பலனளிக்காமல் போனது. கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் பேரூர் சரகத்தில் உள்ளது. நெகமம், கிணத்துக்கடவு இரு போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லை பெரியதாக இருப்பதால், புதிதாக போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கி, கிணத்துக்கடவு டி.எஸ்.பி., அலுவலகம் உருவாக்க வேண்டும்.
* கொலை, கொள்ளை, சட்டவிரோத மது, லாட்டரி விற்பனை, வாகன விபத்து, தற்கொலை என, ஆண்டுக்கு, 400 முதல் 500 வழக்குகள் வரை இங்கு பதியப்படுகிறது. இந்த வழக்குகள் விசாரணை அனைத்தும், பொள்ளாச்சி மற்றும் கோவை கோர்ட்டில் நடக்கிறது.
இதனால், போலீசார், பொதுமக்கள், வழக்குகளுக்கு உட்பட்டோருக்கு சிரமம் ஏற்படுகிறது. கிணத்துக்கடவில் கோர்ட் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இங்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். இதற்கும் இங்கிருந்து பொள்ளாச்சி அல்லது போத்தனூர் பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
* 2012ம் ஆண்டு எம்.எல்.ஏ., தாமோதரன், கிணத்துக்கடவில் பஸ் டிப்போ அமைக்க வேண்டும் என சட்டசபையில் வலியுறுத்தினார். அதன்பின், கிணத்துக்கடவில் டிப்போ அமைக்க இட வசதி குறித்து ஆய்வு செய்து, கருத்துரு தயார் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த பணியும் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
கிணத்துக்கடவு தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பின், துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் அனைத்துமே வர தாமதமாகி வருகிறது. மேலும், கிணத்துக்கடவுக்கு அடுத்து தாலுகாவாக அறிவிக்கப்பட்ட மதுக்கரையில் கூட, தாலுகா அலுவலகம் மற்றும் கோர்ட் என அரசு கட்டமைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளது.