/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாகப்பிரிவினை வழக்குகளுக்கு முன்னுரிமை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு பாகப்பிரிவினை வழக்குகளுக்கு முன்னுரிமை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
பாகப்பிரிவினை வழக்குகளுக்கு முன்னுரிமை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
பாகப்பிரிவினை வழக்குகளுக்கு முன்னுரிமை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
பாகப்பிரிவினை வழக்குகளுக்கு முன்னுரிமை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADDED : செப் 25, 2025 12:30 AM
கோவை: நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்குகளின் தேக்கத்தை குறைக்கவும், நீதித்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மக்கள் நீதிமன்ற விசாரணை, சமரச தீர்வு மையம் வாயிலாக நிலுவை வழக்குகளில் தீர்வு காணப்படுகிறது. கிரிமினல் வழக்குகளை விட, சிவில் வழக்குகள் அதிகளவில் நீண்ட காலம் நிலுவையில் இருக்கின்றன.
அதை கருத்தில் கொண்டு சிவில் வழக்குகள் தேக்கத்தை குறைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, சென்னை ஐகோர்ட், அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில், 'சிவில் வழக்குகளில், சொத்து பாகப்பிரிவினை, உயில் வழக்குகளில், மாவட்ட நீதிமன்றங்கள் முன்னுரிமை அளித்து, ஆறு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட சிவில் கோர்ட் நீதிபதிகள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். வக்கீல்கள் மற்றும் இரு தரப்பினருக்கு வழக்கை விரைந்து முடிக்க அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.
கோவை முன்னாள் அரசு வக்கீல் பி.ஆர்.அருள்மொழி (சிவில் வழக்கு)கூறியதாவது:
கிரிமினல் வழக்குகளை விட, சிவில் வழக்கு நீண்ட கால நிலுவைக்கு, பல்வேறு நடைமுறை சிக்கல்களே காரணம். பாகப்பிரிவினை வழக்கில், முதல் நிலை தீர்ப்பு, இறுதி நிலை தீர்ப்பு என இரண்டு வகையாக அளிக்கப்படுகிறது.
முதல் நிலை தீரப்பில், சொத்து பிரிக்கவும், இறுதி நிலை தீர்ப்பில், வாரிசுதாரர்களுக்கு நிலத்தில் எந்த பகுதியை ஒதுக்குவது என்பது குறித்தும் உத்தரவிடப்படும்.
முதல் நிலை மற்றும் இறுதி நிலை தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்யலாம். முதல்நிலை தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்யப்பட்டால், இறுதி நிலை தீர்ப்பு அளிக்க முடியாத நிலை ஏற்படும். இறுதி நிலை தீர்ப்புக்கு பின், நீதிமன்ற ஆணையர் நிலத்தை பிரித்துக் கொடுத்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் நிலத்தை பிரிக்க முடியாது. தீர்ப்புக்கு பிறகு, வழக்கு தாக்கல் செய்தவர்களில் யாராவது இறந்து விட்டால், வாரிசுகளை சேர்த்து புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு தனியாக விசாரிக்க வேண் டும். இதனால், காலதாமதம் ஏற்படும்.
கோர்ட் தீர்ப்புக்கு பின், சொத்து பிரித்துக் கொடுக்க மறுத்தால், நிறைவேற்று மனு தாக்கல் செய்ய வேண்டும். நிறைவேற்று மனு உத்தரவை நிறைவேற்ற அமீனா, வருவாய் மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காலதாமதம் ஏற்படும். முன்சிப் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக, சப்-கோர்ட், மாவட்ட நீதிமன்றம், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என படிப்படியாக அப்பீல் செய்வதால், வழக்குகள் பல ஆண்டுகள் தாமதம் ஏற்படுகிறது.
இதுபோன்ற நடைமுறை சிக்கல் இருப்பதை கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பாகப்பிரிவினை, உயில் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது, வரவேற்கத்தக்க விஷயம். கீழமை நீதிமன்ற நீதிபதிகள், நிலுவை வழக்கை விரைவாக முடிக்க முன்னுரிமை தருகின்றனர். சமரச தீர்வு மையம் வாயிலாகவும், வழக்கை விரைந்து முடிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.