/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிக்கு அனுமதிஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிக்கு அனுமதி
அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிக்கு அனுமதி
அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிக்கு அனுமதி
அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிக்கு அனுமதி
ADDED : பிப் 01, 2024 11:26 PM
கோவை:கோவை, ஆர்.எஸ்.புரத்தில் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பை, தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கோவை, ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், தரை தளம் மற்றும் எட்டு தளங்களுடன், ரூ.9 கோடியில், 99 குடியிருப்புகள் கட்டும் பணி, 2020ல் துவக்கப்பட்டது. இதில், தரை தளம் மற்றும் மூன்று மாடிகள் கட்டப்பட்டுள்ளன. நான்காவது மாடி கட்டுவதற்கு, 'பில்லர்'கள் போடப்பட்டன.
நகர ஊரமைப்புத்துறை விதிகளின் படி, 3 மீட்டர் அகலத்துக்கு பக்கத்திறவிடம் ஒதுக்கியிருக்க வேண்டும். குடியிருப்பு கட்டும் பணி துவங்கியபோது, தேவையான இடம் இருந்திருக்கிறது. அருகில், மாநகராட்சி சார்பில் 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' கட்டப்பட்டு, சுற்றுச்சுவர் அமைத்ததால், குடியிருப்புக்கான பக்கத்திறவிடம் அகலம், 1.5 மீட்டராக சுருங்கி விட்டது. அதனால், கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.
பல கோடி ரூபாய் செலவிட்டு, குடியிருப்பு கட்டுமான பணியை துவக்கி விட்டு, பாதியில் நிறுத்தி வைத்திருந்ததால், விமர்சனம் எழுந்தது. அதனால், அவ்வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர, ஆலோசிக்கப்பட்டது. கட்டுமானத்தின் உறுதித்தன்மை, கட்டுமான விதிமுறை மற்றும் எத்தனை தளங்கள் கட்டலாம் என்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., குழு ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, தற்போது தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் கூறுகையில், 'பல மாதங்களாக இவ்வளாகம் பயன்பாடின்றி இருந்தது; அவற்றை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. நகர ஊரமைப்புத்துறையில் திருத்திய வரைபடத்துக்கு அனுமதி பெற்றதும், கட்டுமான பணி துவக்கப்படும். இக்குடியிருப்பில், 54 வீடுகள் அமையும்' என்றனர்.


