ADDED : ஜூன் 19, 2025 07:52 AM

பாதாள சாக்கடை அமைத்தால், அனைத்து வகையான திரவ கழிவும் பாதாள சாக்கடை இணைப்பில் வெளியேறும். மழை நீர் மட்டுமே ரோட்டோரத்தில் இருக்கும் வடிகால் வாயிலாக வெளியேறும். இதனால், சுகாதார சீர்கேடு, கொசுத்தொல்லை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, பொள்ளாச்சியில் இத்திட்டம் துவக்க விழாவில் தெரிவிக்கப்பட்டது. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, பாதாள சாக்கடை திட்டத்துக்கு, முதலில், 109.62 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி வாயிலாக கடன், 10.54 கோடி, மானியம், 21.09 கோடி, ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு நிதி, 67.45 கோடி, உள்ளாட்சியின் பங்களிப்பு, 10.54 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மேலும், இத்திட்டத்தை முடிக்க தேவையான கூடுதல் நிதி ஆதாரமாக, 60.60 கோடி ரூபாய் மூலதன மானிய நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நகராட்சி ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள், 165 கி.மீ., நீளத்துக்கும்; 7,400 எண்ணிக்கையில் ஆள் இறங்கும் குழிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 20,000 வீட்டு இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில், மூன்று கழிவுநீர் உந்து நிலையங்கள், 18 கழிவு நீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கழிவுநீரேற்று நிலையங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீர், மாட்டு சந்தை அருகே, 11.25 எம்.எல்.டி., திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த, 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி தற்போது முடிக்கப்பட்டுள்ளது. வீட்டிணைப்பு வழங்கும் திட்டத்தில், அதிகளவு பணம் வசூலிப்பு உள்ளிட்ட காரணங்களால், 6,628 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 13,372 இணைப்புகள் வழங்க வேண்டும். பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் பணிகளை வேகப்படுத்தாமல் ஒப்பந்த நிறுவனம் தாமதப்படுத்தியது.
இதையடுத்து, பழைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இது தான், பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டம் கடந்து வந்த பாதை.
ஆனால், பாதாள சாக்கடை திட்டம் ஆள் இறங்கும் குழியில், கழிவுநீர் வெளியேறி வீதிகள் தோறும் தேங்குகிறது. பணிக்கம்பட்டி ரோட்டில் கழிவுநீர் வெளியேறுவதால் ரோடு சேதமடைந்துள்ளது. குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் 'ரிட்டன்' செல்கிறது.
மழை காலங்களில், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது. பல இடங்களில் ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்து விபத்து பகுதியாக மாறியுள்ளன.
இத்திட்டம் துவங்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகளாகியும் பிரச்னைகளுக்கு தீர்வு என்பதே இல்லாமல் தொடர்கிறது. இத்திட்டத்தில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால், மக்கள் அனுதினமும் அவதிப்படுகின்றனர். இதுதான், தற்போதையே களநிலவரம்.
திட்டம் துவங்கிய போது, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூறியதை கேட்டு, ஆர்வமடைந்த மக்கள், தற்போது நிலவும் அவல நிலையை கண்டு அதிருப்தியில் உள்ளனர்.
- நிருபர் குழு -