/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெடிகாரன்குட்டைக்கு கிடைத்தது மறுஜென்மம்; புத்துயிர் பெறுகின்றன விவசாய விளை நிலங்கள் வெடிகாரன்குட்டைக்கு கிடைத்தது மறுஜென்மம்; புத்துயிர் பெறுகின்றன விவசாய விளை நிலங்கள்
வெடிகாரன்குட்டைக்கு கிடைத்தது மறுஜென்மம்; புத்துயிர் பெறுகின்றன விவசாய விளை நிலங்கள்
வெடிகாரன்குட்டைக்கு கிடைத்தது மறுஜென்மம்; புத்துயிர் பெறுகின்றன விவசாய விளை நிலங்கள்
வெடிகாரன்குட்டைக்கு கிடைத்தது மறுஜென்மம்; புத்துயிர் பெறுகின்றன விவசாய விளை நிலங்கள்
ADDED : மே 12, 2025 12:22 AM

கோவை : மேற்குத்தொடர்ச்சி மலை யடிவாரத்தில், பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்துக்கு அடிப்படையாய் இருந்த வெடிகாரன்குட்டை மண்மூடி முட்புதர்களாகவும், மண்மேடுகளாகவும் சூழப்பட்டிருந்தது. தற்போது சுத்தப்படுத்தி துார்வார தயார் நிலையில் உள்ளது.
கோவை, பேரூர் செட்டிபாளையத்துக்கு அருகே அமைந்துள்ள, ஆறுமுகக்கவுண்டனுாரிலுள்ள சொரிமலை அருகே, சுமார் எட்டு ஏக்கர் பரப்பளவில் உள்ளது வெடிகாரன்குட்டை.
போதுமான பராமரிப்பு இல்லாததாலும், தொடர்ந்து துார்வாரப்படாததாலும் நாளுக்கு நாள் குட்டை சுருங்கி, முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, குறுங்காடு போல மாறி, பயன்பாடு இல்லாமல் போனது.
குட்டையை சுத்தப்படுத்தி, துார்வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதில் தலையிட்ட கலெக்டர், முட்புதர்களை அப்புறப்படுத்தி, குட்டையை துார்வாரும் பணி மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதையடுத்து, முட்புதர் அப்புறப்படுத்தும் பணி, கடந்த வாரம் தனியார் நிறுவன பங்களிப்போடு நிறைவடைந்தது. அடுத்து, குட்டையை துார்வாரும் பணி நடைபெறும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இது குறித்து, பேரூர் தாசில்தார் ரமேஷ்குமார் கூறியதாவது:
ஆறுமுகக்கவுண்டனுாரில் மலையை ஒட்டி அமைந்துள்ளது வெடிகாரன்குட்டை. முட்புதர்கள் நிறைந்து மண் மேடாக காட்சியளித்தது. தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், கடந்த ஒரு வார காலமாக பணி மேற்கொண்டனர்.
முட்புதர்கள் அப்புறப்படுத்தி, குட்டை துார்வாரப்படும். பருவமழை துவங்கினால் மழைநீர் குட்டையில் தங்கும். அப்போது ஆறுமுகக்கவுண்டனுார், பச்சாபாளையம், ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்துார், கோவைப்புதுார் ஆகிய ஐந்து கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
300 முதல் 500 ஏக்கர் வரை, விளைநிலங்கள் பாசன வசதி பெறும். வனவிலங்குகளுக்கு பயனளிக்கும். ஏராளமான பறவைகளும் வந்து செல்லும். இந்த குட்டையை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.